இலங்கையில் இராணுவ ஆட்சிக்கு வித்திடப்பட்டுள்ளதாக வெளிவரும் கருத்துக்களை ஏற்க முடியாது – தவராசா - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 9, 2020

இலங்கையில் இராணுவ ஆட்சிக்கு வித்திடப்பட்டுள்ளதாக வெளிவரும் கருத்துக்களை ஏற்க முடியாது – தவராசா

இலங்கையில் இராணுவ ஆட்சிக்கு வித்திடப்பட்டுள்ளதாக வெளிவரும் கருத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார்.மேலும், போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்க சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தவறில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “எங்கு இராணுவ ஆட்சி என தெரிவிக்கின்றார்கள் என தெரியவில்லை. ஜனாதிபதியின் செயலணியில் இராணுவத்தினர் மட்டுமன்றி, படைத்தரப்பினரும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.

வடக்கில் போதைப் பொருள் பாவணை அதிகரித்துக்கொண்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் போதைப்பொருள் பாவணைக்கு அடிமையாகி வருகின்றனர். போதைப்பொருள் வியாபாரத்தை இராணுவத்தினரால் கட்டுப்படுத்த முடியும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது சமூகத்தில், இன்று போதைப் பொருள் பாவணையால் எமது இளைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சகல படைத்தரப்பினரையும் ஒன்றிணைத்து, செயற்பாட்டை முன்னெடுப்பதன் மூலமே போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

இது இளைஞர் சமுதாயத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டம். இளம் சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டும். அதைவிடுத்து வேறு எங்கு இராணுவ ஆட்சி உள்ளதென்பது தெரியவில்லை” என குறிப்பிட்டார்.