தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை பெற்றோர் அறிந்தால் கவலையடைவார்கள் என்பதால், வீட்டுக்கு தெரியாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த துயரம் இடம்பெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் அவர். நர்சிங்கில் டிப்ளோமா படித்தவருக்கு, திருப்பூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளராக வேலை கிடைத்திருக்கிறது.
திருப்பூர் மங்கலம் பகுதியில் தங்கியிருந்து, அவினாசிபாளையம் ஆம்புலன்ஸில் டெக்னீசியனாக கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்திருக்கிறார்.
கடந்த 4 மாதங்களாகவே ஊருக்குச் செல்லாமல் இருந்தவர், கொரோனா சமயத்தில் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். பெற்றோர்களைப் பார்த்துவிட்டு வருகிறேன் என ஜூன் 7ஆம் திகதி சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்குச் சென்றுவிட்டு, 9ஆம் திகதி திருப்பூர் திரும்பியிருக்கிறார்.
திருப்பூருக்கு வந்த சில நாள்களிலேயே அவருக்கு லேசான காய்ச்சல் இருந்திருக்கிறது. சிகிச்சைக்காக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்குச் சென்றவரை, “கொரோனா சோதனை செய்யதுவிட்டு வாருங்கள்“ எனச் சொல்லி மருத்துவர்கள் அனுப்பியிருக்கின்றனர்.
பரிசோதனை முடிவில் கொரோனா பொசிட்டிவ் என ரிப்போர்ட் வர, மருத்துவ உதவியாளரான அந்த இளைஞர் அதிர்ந்து போயிருக்கிறார்.
ஜூன் 18ஆம் திகதி தனி ஆம்புலன்ஸ் கொரோனா சிகிச்சைக்காக கோவை சி.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக நல்ல ஆரோக்கியத்துடன் சிகிச்சையில் இருந்தவருக்கு நேற்றிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. வென்டிலேட்டரில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்திருக்கின்றனர். இருந்தும் சிகிச்சைப் பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்திருக்கிறார்.
“கொரோனாவுக்கெனத் தனியே ஒதுக்கப்பட்ட ஆம்புலன்ஸில் வேலை செய்யாமல் இருந்தாலும், ஒருவித பயத்துடனேயே அவர் இருந்தார். காய்ச்சல் வந்து கொரோனா உறுதி செய்யப்பட்டதும் உடைந்து போய்விட்டார். நாங்க ஒரு கொரோனா கேஸை கோயம்புத்தூர் சி.எஸ்.ஐ ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செய்ய போறப்ப அவரைப் பார்த்துப் பேசினோம்.
“நல்லா இருக்கேன்னா. சீக்கிரமா சரியாகி வந்துடுவேன்“னு சொன்னாரு. ரெண்டு நாளைக்கு முன்னாடி நண்பர்களோட வீடியோ கால் எல்லாம் பேசியிருக்காரு. நல்லா இருந்தவருக்கு 23ம் தேதி நைட்டு வென்டிலேட்டர்ல வைக்கிற அளவுக்குப் பிரச்னை தீவிரமாகியிருக்கு. வீட்ல விஷயத்தைச் சொன்னா பயந்துடுவாங்கன்னு, கொரோனா பொசிட்டிவ் ஆனதைக் கூட சொல்லாம ஹாஸ்பிட்டல்ல இருந்தாரு” என சக ஊழியர்கள் கலங்கி நிற்கின்றனர்.