கிளிநொச்சி, பளைப் பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவல், ஆனையிறவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது, பளைப் பகுதியைச் சேர்ந்த மாணவன் நான்கு நாட்களாகக் காணவில்லை என பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கல்வி கற்றுவந்த முள்ளியடி, பளையைச்சேர்ந்த ஆர்.அனோச் என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.
இதுகுறித்து, பளை பொலிஸ் நிலையத்தில் கடந்த 28ஆம் திகதி மாணவனின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த மாணவன், பளை தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கடந்த வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதியவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாணவனுடைய பெற்றோர் கடந்த சில நாட்களாக தங்களுடைய உறவினர்களின் வீடுகளிலும் அவரைத் தேடியும் கண்டறியப்படாத நிலையில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், பொலிஸாரும் மாணவனைத் தேடும் நடவடிக்கையை முன்னெடுத்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.