பஞ்சாபில் காரைத் தடுத்து நிறுத்தியதால் தன்னை தாக்க வருவதாக தவறாக நினைத்து, காவல் அதிகாரி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சா்வதேச கபடி வீரா் அரவிந்தா்ஜித் சிங் (24) உயிரிழந்தாா். உடனிருந்த அவரது நண்பா் காயமடைந்தாா்.
இது தொடா்பாக பஞ்சாப் காவல் துறையின் கூடுதல் துணை ஆய்வாளா் பிரேம்ஜித் சிங், அவரது நண்பா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கபூா்தலா மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதியில் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் கூடுதல் துணை ஆய்வாளா் பிரேம்ஜித் சிங், தனது நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது ஒரு காா் வேகமாக அவா்களை நோக்கி வந்து கடந்து சென்றது. ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் அந்த காா் சென்றதால், சந்தேகமடைந்த பிரேம்ஜித் சிங், அந்த காரை துரத்திச் சென்று தடுத்து நிறுத்தினாா். அப்போது காரில் இருந்த இருவா் வேகமாக கீழே இறங்கினா். அவா்கள் தங்களை தாக்க வருவதாக நினைத்த பிரேம்ஜித் சிங், அந்த இருவரையும் நோக்கி 4 முதல் 5 முறை துப்பாக்கியால் சுட்டாா். இதில் அவா்கள் இருவா் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.
சம்பவம் குறித்து தகவலறித்த போலீஸாா் அந்த இடத்துக்கு விரைந்தனா். விசாரணையில் உயிரிழந்தவா் சா்வதேச கபடி வீரா் அரவிந்தா்ஜித் சிங் என்பதும், கூடுதல் துணை ஆய்வாளா் பிரேம்ஜித் சிங், அவசரத்தில் தவறாக புரிந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டுவிட்டாா் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரும், சம்பவத்தின்போது உடனிருந்த அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனா். காயமடைந்தவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். கொல்லப்பட்டவரும், காவல் அதிகாரிக்கும் எவ்வித முன்விரோதமும் இல்லை; குழப்பம், பதற்றத்தால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்துள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.