தமிழ் மக்களின் கழுத்தறுத்து கொல்வதாக எச்சரிக்கை காண்பித்தாக பிரித்தானிய நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி பிரியங்கர பெர்னாண்டோ பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.
யுத்த வெற்றிவிழாவை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் 1,500 இற்கும் அதிகமான இராணுவத்தினர் பதவியுயர்த்தப்படுகிறார்கள். இதில் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோ, மேஜர் ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப்படுகிறார்.
2 வருடங்களின் முன்னர், பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பிரியங்கர பெர்னாண்டோ பணியாற்றிய சமயத்தில், இலங்கை சுதந்திரதினத்தில் பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக இந்த போராட்டம் நடந்தது.
இதன்போது, தூதரகத்திற்கு வெளியில் வந்த பிரியங்கர பெர்னாண்டோ தனது கழுத்தை வெட்டுவதை போல விரல்களால் சைகை காண்பித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டபோது, இராஜதந்திர சலுகையை ஆரம்பத்தில் பெற்று அவர் தப்பித்த போதும், பின்னர் அவர் கழுத்தை அறுத்து சைகை காண்பித்தார் என நீதிபதி அறிவித்தார்.
இன்று 5 பேர் மேஜர் ஜெனரல்களாகவும், 4 பேர் பிரிகேடியர்களாகவும், 39 பேர் லெப்டினன்ட் கேணல்களாகவும், 60 பேர் மேஜர்களாகவும் மற்றும் 60 பேர் லெப்டினன்ட்களாகவும் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது