அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிக்கொண்டவர்கள் பற்றிய புதிய பெயர்ப்பட்டியலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அரசியலமைப்பிற்கு முரணாகவே போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியிருக்கிறார்.<
அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிக்கொள்வதற்கு விண்ணப்பிப்பவர்களில், குடியுரிமை நீக்கப்பட்டவர்களின் பெயர்கள் உள்ளடங்கிய பட்டியலை அமெரிக்கா ஒவ்வொரு காலாண்டும் வெளியிடுவது வழமை.
அவ்வாறு இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்கள் அடங்கிய காலாண்டுக்கான பெயர்ப்பட்டியல் அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடங்கியிருக்கிறது.
கோத்தாபயவின் குடியுரிமை சர்ச்சை தேர்தல் காலத்தில் எழுந்திருந்தது.
இந்நிலையில் நேற்று அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலில் கோத்தாபய ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்கியிருப்பதால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேளையில் அவர் அமெரிக்கக் குடியுரிமைக்கு உரித்துடையவராக இருந்தாரா என்ற பாரிய சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது,
கோத்தாபய ராஜபக்ஷ இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்த போதிலும், அவர் அரசியலமைப்பிற்கு முரணாகவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவாகியிருக்கிறார் என்பது இப்போது உறுதியாகின்றது. இலங்கையின் அரசியலமைப்பை மீறும் வகையில் அடிக்கடி அவரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளுக்கு இப்போது அர்த்தம் புரிகிறது என்று பதிவிட்டுள்ளார்.