வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்பும் போது மத்திய கிழக்கு நாடுகள் சர்வதேச சட்டத்திட்டங்களை மீறி கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த சட்டத்திட்டங்களை மீறி தொற்றுக்குள்ளானவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் நாடுகளில் குவைத் பிரதான இடம் வகிப்பதாக வெளிவிவகார அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் குவைத் அரசாங்கம் தங்கள் சொந்த விமானத்திலேயே இலங்கையர்கள் பலரை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று சுகாதார அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச சட்டத்திட்டங்களை கடைபிடித்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னரே இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பி வந்தவர்களில் இதுவரை 505 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.