திருமணமான ஒன்றரை மாதத்தில் தூக்குப் போட்ட காதல் ஜோடி! - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, May 13, 2020

திருமணமான ஒன்றரை மாதத்தில் தூக்குப் போட்ட காதல் ஜோடி!
திருமணமான 1½ மாதத்தில் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகிலுள்ள மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன் ஜெயக்குமார் (24). இவர் அடிக்கடி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லூர் கிராமத்திற்கு சென்று வந்தார். அப்போது அந்த ஊரை சேர்ந்த விஜயா (23) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.

விஜயா ஆசிரியர் பயிற்சி பெற்றவர். இவர்களின் காதல் இருவரின் பெற்றோருக்கும் தெரிய வந்துள்ளது. விஜயாவின் காதலுக்கு பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். எனவே ஜெயக்குமார் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 1½ மாதத்துக்கு முன்பு காதலி விஜயாவை அழைத்து வந்து கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் கோட்டக்கல் கிராமத்திற்கு வந்து இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். விஜயா வீட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனித்தனி அறையில் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

வயலுக்கு சென்று வீடு திரும்பிய ஜெயக்குமாரின் பெற்றோர் பலமுறை கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியே பார்த்தபோது ஜெயக்குமாரும், விஜயாவும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தானிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமச்சந்திரா, இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயக்குமார், விஜயா ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.