ஏனைய நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பரவல் குறைவு என கணிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 1, 2020

ஏனைய நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பரவல் குறைவு என கணிப்பு!


கொரோனா பரவலில் கடந்த ஒரு மாதத்தில் மற்ற நாடுகளை விட இந்தியா குறைவான இடத்திலேயே இருப்பதாக சென்னை கணித அறிவியல் கல்வி நிறுவன புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மார்ச் 17-ஆம் திகதி நிலவரப்படி கொரோனா பாதித்த ஒருவரின் தொற்று மற்றொருவருக்கு பரவுவது 1.7 ஆக இருந்த நிலையில், மார்ச் 26-ஆம் திகதி அது 1.81 ஆக அதிகரித்தது.

இதே காலத்தில் உலகில் சராசரியாக கொரோனா தொற்று பரவல் ஒருவரிடமிருந்து 2 முதல் 3 பேராக இருந்தது. அதேநேரம் மார்ச் மாதத் தொடக்கத்தில் 3ஆக இருந்த தொற்று எண்ணிக்கை மாத இறுதியில் ஆயிரத்துக்கு மேலாக உயர்ந்தது.

எனினும், ஸ்பெயின், இத்தாலி, தென்கொரியா, அமெரிக்கா நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த உயர்வு மிக சமநிலையான ஒன்றாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று மட்டுமின்றி உயிரிழப்பிலும் இந்தியா மற்ற நாடுகளைவிட மிகவும் குறைந்த நிலையிலேயே நீடிப்பதாக அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. முதல் வாரத்தில் 3ல் இருந்து 43 ஆக இருந்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, அடுத்த வாரத்தில் 114 ஆகவும், மார்ச் 29ஆம் திகதி 1071 ஆகவும் அதிகரித்தன.

ஆனால், இந்த எண்ணிக்கையை ஒத்து இருந்த தென்கொரியாவில் மார்ச் 29ஆம் திகதி 1,766 பேர் பாதிக்கப்பட்டனர். சிங்கப்பூரில் 29 நாட்களில் 17,361 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

ஊரடங்கு முடிய வாய்ப்புள்ள ஏப்ரல் 14ஆம் திகதியாகும் போது இந்தியாவில் எண்ணிக்கை 3 ஆயிரம் ஆகலாம் என்றும், மிக மோசமான பரவலாக இருந்தாலும் 5 ஆயிரம் வரை தொடலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அமெரிக்காவில் 1,40,000 மற்றும் இத்தாலியில் 102000 ஆக உள்ள எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் இந்தியாவில் கொரோனா பரவல் மிகக் குறைந்த அளவிலேயே உயர்ந்து வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.