தற்போதைய அறிக்கையின் படி இலங்கையில் மொத்தமாக கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 588ஆக அதிகரித்துள்ளது.
இரவு 11 மணியுடன் நிறைவடைந்த 15 மணி நேரத்தில் 65 தொற்றாளர்கள்
முதலாம் இணைப்பு 27-04-2020 10:00pm
கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்று இரவு 10 மணியாகும் போது 600 ஐ அண்மித்துள்ளது.
இன்று இரவு 10 மணியுடன் நிறைவடைந்த 14 மணி நேரத்தில் 61 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அந்த எண்ணிக்கை 584 ஆக உயர்ந்தது.
இன்னும் நள்ளிரவு நேரத்தில் மேலும் பல பரிசோதனை முடிவுகள் வெளிவர இருந்த நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600 ஐ எட்டலாம் என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.
இன்று அடையாளம் காணப்பட்டிருந்த தொற்றாளர்களில் பலர் 18 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரண தெரிவித்தார்.
இந் நிலையில் இன்று மாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதியிஉல் பதிவான தொற்றாளர்களில் 180 பேர் வெலிசறை கடற்படை முகாமின் கடற்படை வீரர்களாவர் என கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவரும் முப்படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் கொமாண்டர் சவேந்திர சில்வா கூறினார்.
‘ இதுவரை வெலிசறை கடற்படை முகாமுடன் தொடர்புபட்ட 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் 68 பேர் விடுமுறைகளில் வீடுகளில் இருந்த போது, அவ்வந்த பகுதி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது. ஏனைய 112 வீரர்களுக்கும் வெலிசறை கடற்படை முகாமில் தொற்று உறுதியாகியுள்ளது. ‘ என லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தகவல்கள் பிரகாரம், நாட்டில் உள்ள 26 சுகாதார மாவட்டங்களில், 5 மாவட்டங்கள் தவிர ஏனைய 21 மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
அம்பாறை, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, நுவரெலியா ஆகிய சுகாதார மாவட்டங்கள் தவிர ஏனைய அனைத்து சுகாதார மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.
இந் நிலையில் இன்று 10 மணியுடன் நிறைவடைந்த 14 மணி நேரத்தில் மட்டும் மொத்தமாக 61 தொற்றாளர்கள் நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்ட நிலையில், இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 584 ஆக அதிகரித்திருந்தது.
இன்று பாதிக்கப்பட்ட மேலும் அறுவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு கூறியது.
அதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. இந் நிலையில் மேலும் 448 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மற்றும் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அத்துடன் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையிலும் சடுதியான அதிகரிப்பை அவதானிக்க முடிகின்றது. கொரோனா தொற்று இருக்கலாம் எனும் சந்தேகத்தில் 295 பேர் நாடளாவிய ரீதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்கள் நாடளாவிய ரீதியில் 32 வைத்தியசாலைகளில் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அதிகமானோர் குருணாகல் போதனா வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெறுகின்றனர். அங்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 43 ஆகும்.
இதனைவிட ராகம வைத்தியசாலையில் 27 பேரும், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் 21 பேரும் கடற்படை வைத்தியசாலையில் 29 பேரும் இரத்தினபுரி வைத்தியசாலையில் 17 பேரும் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சை பெறுவோரில் உள்ளடங்குகின்றனர்.
தொற்றாளர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் எண்ணிக்கை 259 ஆகும்.
இந் நிலையில் இதுவரை நாடளாவிய ரீதியில் மொத்தமாக 21 சுகாதார மாவட்டங்களில் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இன்று காலை 10.00 மணி வரையிலான தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே கண்டறியப்பட்டுள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 155 ஆகும்.
கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியிலும் தொற்றாளர் ஒருவர் கண்டறியப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக களுத்துறை மாவட்டத்தில் 63 பேரும், புத்தளத்தில் 39 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 49 பேரும் இதுவரை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 16 ஆகும். கண்டியில் 5 கடற்படையினர் தொற்றாளர்களாக அடியாளம் காணப்பட்ட நிலையில் அம்மாவட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய மாகாணத்தில் மொத்தமாக 123 கடற்படையினர் வெலிசறையில் இருந்து விடுமுறைக்கு வீடுகளுக்கு வருகை தந்திருந்துள்ளனர். இவர்களில் கண்டி மாவட்டத்துக்கு 77 பேரும் மாத்தளை மாவட்டத்துக்கு 34 பேரும் நுவரெலியா மாவட்டத்துக்கு 12 பேரும் சென்றுள்ளனர்.
இந் நிலையிலேயே கண்டியை சேர்ந்தவர்கள் 5 கடற்படை வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அத்துடன் மாத்தளை மாவட்டத்தில் ஒருவரும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இரத்தினபுரியில் 7 பேரும், குருணாகலையில் 15 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டள்ளமை உறுதியாகியுள்ளது. குருணாகல் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டவர்களில் 12 பேர் கடற்படை வீரர்களாவர்.
இதனால் குளியாபிட்டிய, வாரியப்பொல, கல்கமுவ மற்றும் கணேவத்த உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கேகாலையில் 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனுராதபுரம் மாவட்டத்தில் 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடற்படை வீரர்களாவர்.
தெற்கில் மொணராகலை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் முறையே 4,3 என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாத்தறை, கல்முனை,பதுளை, வவுனியா ஆகிய சுகாதார மாவட்டங்களில் தலா இருவர் வீதம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் வவுனியாவின் ஒரு பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
காலி, மட்டக்களப்பு, பொலன்னறுவை, திருகோணமலை ஆகிய சுகாதார மாவட்டங்களில் தலா ஒவ்வொரு கொரோனா தொற்றாளர் வீதமும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.