கொழும்பு, கம்பஹா, கண்டி, புத்தளம், களுத்துறை, கேகாலை, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு எதிர்வரும் 20ம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்ப்படுத்தப்படும்.
ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களில் மீளறிவித்தல் வரும் வரையில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில்
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கோகலை, புத்தளம் மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இவ்வாறு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளது.
குறித்த பகுதிகளில் தினமும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மாத்திரமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.
இந்த மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 8 மணி முதல் மறு நாள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.
கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவத்துகொடை, அக்குரணை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த 3 மாவட்டங்களினதும் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்படாத பகுதிகள்
கொழும்பு மாவட்டம் – கொட்டஹேன, கிராண்ட்பாஸ், பம்பலப்பட்டிய, கெசல்வத்த, மருதான, கொத்தட்டுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டிய, மவுண்ட்லவனியா, தெஹிவளை, கொஹூவல.
கம்பஹா மாவட்டம்- ஜாஎல,கொச்சிக்கடை, சீதுவை.
புத்தளம் மாவட்டம் – புத்தளம், மாரவில, வென்னப்புவ
களுத்துறை மாவட்டம்- பண்டாரகம, பயகல, பேருவளை, அளுத்கம.
இந்த மாவட்டங்களின் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஏப்ரல் 22 ஆம் திகதி புதன்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அகற்றப்பட்ட பகுதிகளில் கூட, பிரதான சாலைகள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்து வேலைவாய்ப்பு தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது ஒரு கிராமம் இடர்நிலைக்குள்ளான பிரதேசமாக இனம்காணப்பட்டால் அப்பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட இடமுள்ளது. ஏதேனும் ஓரு பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக குறிப்பிடப்பட்டடிருந்தால் எவரும் அங்கு உள்வருவது மற்றும் வெளியேறுவது முற்றாக தடைசெய்யப்படும்.
ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் பொலிஸ் பிரிவுகளில் அத்தியாவசிய சேவைகளுக்காக பிரதான வீதிகளினூடாக பயணம் செய்யமுடியும். ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலும் பிரதான வீதிகளை தொழிலுக்காக சென்று வருதல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். மாவட்டங்களுக்கிடையிலான பயணம் தொழில் தேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைக்காக மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் வழமையான ஒழுங்கில் செயற்படும்.
கொழும்பு மாவட்டத்தின் உள்ளே அரச நிறுவனங்களில் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும். ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களில் 50 வீதமான ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும். அனைத்து அரச நிறுவனங்களிலும் பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் வீட்டிலிருந்து தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திலும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் யார் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும். ஒரு நாளில் பணிக்கு சமூகமளிக்கும் முன்றில் ஒரு பகுதியினர் மற்றும் 50 வீதமானவர்களுக்கு பதிலாக அடுத்த நாளில் வேறு பிரிவினரை தெரிவுசெய்வதற்கு நிறுவனத் தலைவர்களுக்கு முடியும்.
அலுவலகங்களை திறந்து நடத்திச் செல்லுகின்ற போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு தேவையான வசதிகளை வழங்குவது நிறுவன தலைவர்களின் பொறுப்பாகும்.
தனியார் துறை நிறுவனங்கள் காலை 10.00 மணிக்கு திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய எண்ணிக்கை மற்றும் யார் சமூகமளிக் வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும். இந்நிறுவனங்களும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
மீண்டும் திறக்கப்படும் அலுவலகங்களில் ஊழியர்களின் போக்குவரத்து வசதிகளை வழங்க போக்குவரத்துச் சபை மற்றும் புகையிரத சேவை ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்களில் கடமைக்கு சமூகமளிக்கும் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருப்பினும் அரச போக்குவரத்து சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் அனைத்து ஊழியர்களும் கடமைக்கு சமூகமளிப்பது கட்டாயமானதாகும்.
பஸ் வண்டிகள், வேன் அல்லது புகையிரதங்களில் பயணம்செய்யும் பயணிகளின் எண்ணிக்கையில் அரைவாசி அளவு மட்டுமே பயணம்செய்ய வேண்டும். அனைத்து வாகனங்களும் கிருமி தொற்றுநீக்கத்திற்கு உற்படுத்த வேண்டும். இந்த நிபந்தனைகளின் கீழ் தமது பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அரசாங்கம் தனியார் துறை போக்குவரத்து நிறுவனங்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.
அனைத்து வகையான விழாக்கள், சுற்றுப்பயணங்கள், யாத்திரைகள், களியாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்ற மீண்டும் அறிவிக்கும் வரை தடைசெய்யப்பட்டுள்ளன. மக்கள் ஒன்றுகூடுவது வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தடை என்பதால் சமய விழாக்களையும் இடைநிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா ரைஸ் பரவுவதற்கு மத்தியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மக்களின் இந்த பயங்கரமான நோய்த்தொற்றிலிருந்து விடுவிக்கும் நோக்குடனேயே செயற்படுத்தப்படுகின்றது. பின்பற்றிய கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக கிடைத்த முன்னேற்ற நிலைமைகள் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு உதவியது. பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வறிய மற்றும் இடர் நிலைக்குள்ளான மக்கள் பிரிவினரின் வாழ்க்கையை பாதுகாப்பது மற்றுமொரு நோக்கமாகும்.
எனினும் கொரோனா தொற்று அபாயம் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. எனவே வைரஸ் பரவுவதற்கு மீண்டும் இடமளிக்காத வகையில் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி பொறுப்புடனும் பொறுமையாகவும் செயற்படுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தொழிலுக்காக சென்றுவருவதை தவிர வேறு சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்துகொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியவுடன் தேவையற்ற பதற்றத்துடன் பெருமளவில் ஒன்றுகூடும் வகையில் வர்த்தக நிலையங்களில் ஒன்றுகூட வேண்டாம் என்றும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா பிரச்சினையை முழுமையாக ஒழித்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடும் வரை தம்முடையவும் பிள்ளைகளுடையவும், தேசத்தினதும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அனைத்து கஷ்டங்களையும் பொறுப்புடன் சகித்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.