ஐ.தே.க.ஒற்றுமைப்படாவிடின் எதிர்காலத்திலும் பின்னடைவையே சந்திக்கும்- சிறிநேசன் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 7, 2020

ஐ.தே.க.ஒற்றுமைப்படாவிடின் எதிர்காலத்திலும் பின்னடைவையே சந்திக்கும்- சிறிநேசன்

ஐக்கிய தேசியக் கட்சியானது இன்னும் ஒற்றுமைப்படாமல் இருப்பதென்பது எதிர்காலத்தில் பலமானதொரு சக்தியாக பயணிப்பதற்குரிய விடயத்தில் பின்னடைவை ஏற்படுத்துமென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மேலும் ஆளும் கட்சி அசூரவேகத்தில் ஆட்சியை பிடிக்கும் சூழ்நிலையும் எதிர்க்கட்சி பலவீனமான சூழ்நிலையும் காணப்படுமானால் அது சிறுபான்மை சமூகத்திற்கு பாதிப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை)  மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் ஞா.சிறிநேசன் மேலும் கூறியுள்ளதாவது, “தொழில் வாய்ப்பு என்பது இளைஞர்களும் யுவதிகளும் ஆர்வமாக எதிர்பார்க்கின்ற விடயமாகும்.

அரசாங்கம் தொழில் வாய்ப்பை வழங்கப்போகின்றது என்றால் இளைஞர்களும் யுவதிகளும் மிக ஆர்வமாக இருக்கின்றனர். அந்தவகையில் தான் ஒருஇலட்சம் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பு மற்றும் பட்டதாரிப் பயிலுநர்களுக்கான தொழில்வாய்ப்பு என்ற விடயம் பேசுபொருளாக இருக்கின்றது.

பட்டதாரிப் பயிலுநர்களுக்கான தொழில் வாய்ப்பு என்ற விடயத்தில் இரண்டு விடயங்களை சொல்லவேண்டியிருக்கின்றது. கடந்த காலத்தில் பட்டதாரிப் பயிலுநர்களாக பயிற்சி பெற்றவர்கள் ஒருவருட முடிவில் நிரந்தர தொழில்வாய்ப்பை வழங்குகின்ற விடயத்தில் அவர்களை மத்திய அரசுடன் இணைத்து தொழில் வாய்ப்பை வழங்குகின்ற செயற்பாடு இருந்தது. மற்றையது மாகாணத்திற்குட்பட்டு தொழில் வழங்குகின்ற விடயமாகும்.

தற்போது ஒருவருட பயிற்சியின் பின்னர் மத்திய அரசோடு இணைப்பு செய்யப்பட்டு திணைக்களங்கள், அலுவலகங்களில் வேலை செய்தவர்களுக்குரிய நிரந்தர நியமனங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில் மாகாணத்திற்குட்பட்ட உள்ளூராட்சி சபைகளில் பயிலுநர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்குகின்ற விடயத்தில் பாரபட்சமான செயற்பாடு நடைபெற்றிருக்கின்றது.

இதனால் எதிர்காலத்தில் பயிற்சிகளை பெற்ற பட்டதாரிப் பயிலுநர்களில் ஒருதொகுதியினர் ஏமாற்றப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்.

மத்திய அரசு கையாளுகின்ற செயற்பாடு என்பது பட்டதாரிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது. அரசாங்கமானது மத்திய அரசில் பயிற்சி பெற்றவர்கள் மாகாணத்திற்குட்பட்டு பயிற்சி பெற்றவர்கள் என்று பாரபட்சம் காட்டாது சகல பட்டதாரிப் பயிலுநர்களுக்கும் தொழில் வாய்ப்பை வழங்க வேண்டும்.

56ஆயிரம் பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பு வழங்கப்படப்போகின்றது, 46ஆயிரம் பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பு வழங்கப்படப்போகின்றது, நூறு நாள் வேலைத்திட்டம் என்ற விடயம் தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு உக்கிரமாக பேசப்பட்டது. தற்போது  நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முதல் நாள் இந்த நியமனம் வழங்கப்படவிருக்கின்றது என்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தொழில் வாய்ப்புகளை வழங்குகின்ற செயற்றிட்டத்தில் தேர்தல் திணைக்களத்தினர் தலையிடமாட்டார்கள் என்றெல்லாம் கருத்துகள் சொல்லப்பட்டன.

தற்போது பட்டதாரிப் பயிலுநர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தங்களது தொழில் வாய்ப்பை பெற்றுவிட்டோம் என்று மிகவும் புளகாங்கிதம் அடைந்துகொண்டிருக்கின்ற இவ்வேளையில் தேர்தல் முடிவடைந்த பின்னர்தான் அவர்களுக்குரிய தொழில் வாய்ப்பை கொடுக்க முடியும் என்ற விடயம் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து கிட்டத்தட்ட நூறு நாட்களுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் தொழில் வாய்ப்புகளை முன்னரே வழங்கியிருந்தால் பட்டதாரிகள் ஏமாற்றப்பட்டிருக்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்காது. இளைஞர், யுவதிகளை தொழில் வாய்ப்பு என்ற இனிப்பைக் காட்டி அவர்களை ஏமாற்றுவதாக கருதுகின்றனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் இந்த தொழில் வாய்ப்புகளை அவசர அவசரமாக வழங்கியது என்ற விடயத்தில் ஏதேனும் அரசியல் இருக்கின்றதா அல்லது தொழில் வாய்ப்பை வழங்குகின்றபோது யாரேனும் அதனை சுட்டிக்காட்டுவார்கள், அவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்யலாம் இதனை எதிர்கட்சிகளின் தலையில் கட்டிவிடலாம் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட வேலைப்பாடா என்பது பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் என்ற விடயத்தில் தற்போது இழுபறி நிலை காணப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டுக் கட்சி ஒன்று உருவாகியுள்ள நிலையில் அதற்கு சஜித் பிரேமதாச  தலைமை தாங்கிக்கொண்டிருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க  இருக்கின்றார்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியானது, இன்னும் ஒற்றுமைப்படாமல் இருப்பதென்பது எதிர்காலத்தில் பலமானதொரு சக்தியாக பயணிப்பதற்குரிய விடயத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்” என குறிப்பிட்டுள்ளார்.