யாழில் கொரோனா தாண்டவமாடினால் வடக்கைத் தொடர்ந்து முடக்குவதே தீர்வு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 23, 2020

யாழில் கொரோனா தாண்டவமாடினால் வடக்கைத் தொடர்ந்து முடக்குவதே தீர்வு


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இங்கு மேலும் பலர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டால் வடக்கு மாகாணத்தை ஓரிரு வாரங்களுக்குத் தொடர்ந்து முடக்கி வைப்பதே ஒரே வழியாகும். ஏனெனில் அப்போதுதான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்.”

– இவ்வாறு கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கொரோனா வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில்தான் ஊரடங்குச் சட்டத்தை வடக்கில் நீடித்துள்ளோம். ஏனெனில் வடக்கில் மக்கள் செறிந்து வாழ்கின்றார்கள். அவர்கள் வெளியில் உலாவும்போது நோய்த் தொற்று அதிவேகத்துடன் பரவும். எனவே, அவர்கள் தேவையற்று வெளியில் வராமல் சில நாட்களுக்கு வீடுகளுக்குள் இருப்பதே நல்லம்.

சுவிஸிலிருந்து கடந்த 10ஆம் திகதி கடுமையான காய்ச்சலுடன் இலங்கை வந்திருந்த மதப் போதகர் ஒருவர் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் விசேட ஆராதனை நடத்தியுள்ளார் எனவும், அவர் சுவிஸ் திரும்பியதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் அவருடன் தனிமையில் இருந்து உரையாடியவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் குறித்த போதகருடன் 180 பேர் நெருக்கமான தொடர்பைப் பேணியுள்ளனர் என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. எனவே, அவர்களை அடையாளம் காண்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அவர்கள் தாமாகவே முன்வந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பரிசோதனைகளை மேற்கொண்டு தங்களையும் ஏனையோர்களையும் பாதுகாப்பதே சிறந்தது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் நோயால் மேலும் பலர் பாதிக்கப்பட்டால் வடக்கு மாகாணத்தை ஓரிரு வாரங்களுக்குத் தொடர்ந்து முடக்கி வைப்பதே ஒரே வழியாகும். ஏனெனில் அப்போதுதான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்” – என்றார்.