கொரோனா வைரஸ்: மஹிந்த அமரவீரவின் மகன் தனிமைப்படுத்தப்பட்டார்! - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, March 17, 2020

கொரோனா வைரஸ்: மஹிந்த அமரவீரவின் மகன் தனிமைப்படுத்தப்பட்டார்!

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்த அமைச்சர் மஹிந்த அமரவீரவின் மகன் பசன் அமரவீர தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, தியத்தலாவிலுள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை நேற்று பிற்பகல் 28 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக நேற்று மட்டும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் ஸ்ரீ லங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி படுத்தப்பட்டுள்ளது.

இதனால், ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஏனைய ஊழியர்கள் சிலரை தனிமைப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட 11 ஆவது நபருக்கும் அவரது மனைவிக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நோய் நிலைமையை மறைத்தமை மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கல்கிசை பதில், நீதிவான் சி.ஏ.தர்மதிலக முன்னிலையில், கல்கிசை பொலிஸார் சார்பில் பொலிஸ் சட்டப்பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவினால் இந்த வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக நீதவானுக்கு தெளிவுப்படுத்தலும் பொலிஸ் தரப்பினால் மேற்கொள்ளப்பட்டது. இந்த விடயங்களை ஆராய்ந்த நீதவான், இதுதொடர்பாக விசாரணை செய்து எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதிக்கு முன்னர் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.