
மார்ச் 5 சுவிஸில் கொறோனா காரணமாக 74- வயது பெண் ஒருவர் வாட் மாநிலத்தில் இறந்துள்ளார். இவர் ஏற்கெனவே நெடுநாள் சுகயீனமானவர் என்பதும், இத்தாலி சென்றதன் மூலமே இவரிற்கு கொறோனா தொற்றியதும் குறிப்பிடத்தக்கதாகும். இதுவே சுவிஸில் ஏற்பட்ட முதல் கொறோனா இறப்பு ஆகும். மேலும் மார்ச் 8 இரண்டாவது நபராக 76 வயது ஆண் ஒருவர் பாசல் மாநிலத்தில் இறந்துள்ளார். இவர் நெடுங்கால இதயநோயாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே நோய்கள் கொண்ட 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கே கொறோனாவின் தாக்கம் அதிகமென சுவிஸ் அரசு கூறியுள்ளது. இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதயநோய்கள், புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்புச்சக்தியை பலவீனமாக்கும் நோய்களை கொண்டவர்களே இந்த வைரஸ் ஊடாக அதிகம் பாதிக்கப்படுபவர்கள் என்பதை மக்கள் அறிந்திருப்பது முக்கியமாகும்.
தொடர்ந்தும் 1000ற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் நடைபெற மாட்டன என்றும் கொறோனா தொற்றேற்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்- என சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருந்து, சுவிஸ் அரசின் அறிவித்தலின் படியாக ஒவ்வொருவரும் தங்களையும், பிறரையும் பாதுகாத்தும் வகையில் ஒழுங்குமுறைகளை கடைப்பிடிப்பது முக்கியமாகும்.