கொரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,000த்தையும் கடந்து விட்டது. சீனாவின் ஹூபெய்யில் மட்டும் மேலும் 42 பேர் கொடிய வைரஸுக்குப் பலியாகியுள்ளனர்.
சீனாவில் மட்டும் கொரோனா பலி எண்ணிக்கை 2912 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 202 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் சீனாவின் காட்டு விலங்குகள் இறைச்சி சந்தையிலிருந்து பரவியதாகக் கருதப்படும் கொரோனா வைரஸ் 60 நாடுகளில் பரவியுள்ளது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா நாடுகள் முதல் கொரோனா பலியை அறிவிக்க, இத்தாலி, தென் கொரியா, ஆகிய நாடுகளும் மீள முடியுமா என்ற கேள்வியுடன் கொரோனாவுடன் போராடி வருகிறது.
அதாவது 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோரை கொரோனா அதிகம் தாக்குகிறது என்பதோடு ஏற்கெனவே பிற நோய்க்கூறுகள் உள்ளவர்களை கொரோனா எளிதில் தொற்றுகிறது என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கரோனா வைரஸினால் இரண்டுக்கும் மேற்பட்ட நோய்க்கூறுகள் தென்படுகின்றன, இதில் பிரதானமானது நிமோனியா என்பது குறிப்பிடத்தக்கது.
தென் கொரியாவில் இதுவரை 22 பேர் பலியாக புதிதாக 500 பேருக்கு கொரோனா தொற்று பீடித்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் சீனாவுக்கு அடுத்தபடியாக 4,000 கொரோனா நோயாளிகள் தென் கொரியாவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.