தனிமைப்படுத்தலில் இருந்து தப்பித்துள்ள 170 பேர்: தொடரும் தீவிர தேடுதல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, March 17, 2020

தனிமைப்படுத்தலில் இருந்து தப்பித்துள்ள 170 பேர்: தொடரும் தீவிர தேடுதல்

இத்தாலி தென்கொரியாவிலிருந்து இலங்கை வந்த 170 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பித்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து மார்ச் 01 திகதி முதல் 16 ம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இலங்கைக்கு வந்த அனைவரையும் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்துகொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா வைரசிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.

இத்தாலி கொரியாவிலிருந்து நாடு திரும்பி தங்கள் குடும்பத்தினருடன் வாழும் 170 பேர் இதுவரை தனிமைப்படுத்தலிற்கு உட்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாங்கள் அவர்களை பரிசோதனைகளிற்கு உட்படுத்தவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

14 நாள் தனிமைப்படுத்தலிற்கு உட்படாதவர்கள் பொலிஸாரிற்கு தங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களை தனிமைப்படுத்தல் மையங்களிற்கு அழைத்துச் செல்லப் போவதில்லை. அவர்கள் வீடுகளில் வைத்தே தனிமைப்படுத்தப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளாதவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.