மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் அனைத்து பிரேரணைகளில் இருந்தும் தனித்து நீங்க முடியாது என்றும் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடனே விலக முடியும் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், 2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவந்த 30/1 பிரேரணையை கடந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர தன்னிச்சையாக கைச்சாத்தினார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அவ்வாறான பிரேரணைக்கு கைச்சாத்திடுவதாக இருந்தால் அந்த விடயம் தொடர்பாக அமைச்சரவைக்கு தெரிவித்து அனுமதியை பெற்றுக்கொள்வதுடன் நாடாளுமன்றத்திற்கும் அறிவித்திருக்க வேண்டும்.
ஆனால் அமைச்சரவைக்கும் தெரிவியாது, ஜனாதிபதிக்கும் அறிவிக்காமலே மங்கள சமரவீர இந்த பிரேரணையில் கைச்சாத்திட்டனர். அத்துடன் கடந்த ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையின்போதும் குறித்த பிரேரணையின் 40/1க்கும் கடந்த அரசாங்கம் கைச்சாத்திட்டிருக்கின்றது.
ஆனால் எமக்கு எதிராக யுத்தக்குற்றம் தெரிவித்து ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு பிரேரணை கொண்டுவந்த அமெரிக்கா, மனித உரிமை பேரவையில் இருந்து விலகியுள்ளது.
அவ்வாறான நிலையில் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிவந்த நாங்கள் பிரேரணையில் இருந்து நீங்குவதால் எந்த பிரச்சினையும் இல்லை.
இதில் கைச்சாத்திட்ட மங்கள சமரவீரவுக்கு பிரச்சினை ஏற்படலாம். ஏனெனில் அவர் இலங்கை அரசாங்கத்தின் அனுமதி இல்லாமலே அதில் கைச்சாத்திட்டிருக்கின்றார். அவர்களின் நடவடிக்கை தேசத்துரோக செயலாகும்” என கூறினார்.