மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மக்களின் நலன்கருதி எந்தவித செயற்பாடுகளையும் முன்னெடுக்காதமைக்கு அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அஜித் மானப்பெரும மேலும் கூறியுள்ளதாவது, “சர்வதேச கடனை செலுத்துவதற்காக உதவி கோரி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை நாட்டிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது
மேலும் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் அவர்களின் நலன்கருதி எந்தவித செயற்பாடுகளையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.
இதற்காக அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அத்துடன் தேர்தல்காலங்களின் போது வெங்காய விலையை காண்பித்து பெரிதும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
ஆனால் தற்போது உலக சந்தையில் எண்ணையின் விலை குறைந்துள்ள போதிலும் அந்த சலுகையை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாமல் இருக்கின்றனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறவேண்டும் என்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.