கோத்தா சொல்லி கொலை செய்தால் நிரபராதி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, February 29, 2020

கோத்தா சொல்லி கொலை செய்தால் நிரபராதி!ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேரை வெள்ளை வானில் கடத்தி காணாமல் போகச்செய்த வழக்கில், விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதியான அட்மிரல் வசந்த கரன்னாகொடவை, நிராபராதி என்று அரசாங்கத்தின் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

தொடர்ச்சியாக நான்கு தடவைகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத அட்மிரல் கரன்னாகொடவுக்கு நான்கு அழைப்பாணைகள் பிறப்பிக்கப்பட்டபோதும், போரை முடிவுக்குக் கொண்டுவர உதவிய படை அதிகாரி என்ற ரீதியில் மன்றில் முன்னிலையாகாமல் காரணம் முன்வைக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2008, 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு, தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேரது வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை மற்றும் பிரதான நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவரும் நிலையில், இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதியான அட்மிரல் வசந்த கரன்னாகொட நான்கு தவணை விசாரணைகளிலும் முன்னிலையாகவில்லை.
முதலாவது விசாரணை அமர்வில் அவர் முன்னிலையாகாதபடியால் அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. எனினும், தொடர்ந்து அவர் முன்னிலையாகத் தவறியதால் 4 தடவைகள் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டன. 

அவரது நீதிமன்ற அவமதிப்பு செயற்பாட்டுக்கு, வழக்கு விசாரணையின்போது நீதவான் அண்மையில் அதிருப்தியும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு – நாரஹேன்பிட்டியிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.

இதன்போது, அட்மிரல் வசந்த கரன்னாகொட பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன,“வழக்கு விசாரணையில் முன்னிலையாகாத அட்மிரல் வசந்த கரன்னாகொட நிரபராதி.நீதிமன்றத்தை அவர் அவமதிக்கிறார் எனக் கூறுவது முற்றிலும் பொய். மிகவும் பொய்யான குற்றச்சாட்டின்கீழ் நிரபராதி ஒருவரை கைது செய்வதாயின் அது சாதாரண விடயமல்ல. படையினருக்கெதிராக இந்த நாட்டில் பாரிய சூழ்ச்சிகள் இடம்பெற்றதை ஊடகவியலாளர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டுக்கு எதிராகவும் நாட்டுக்கு வெளியே ஜெனிவாவிலும் படையினர் இனப்படுகொலை செய்தனர் எனவும் போர்க் குற்றம் புரிந்தனர் எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றபோதிலும், அவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

தமது அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற நிரபராதி ஒருவரை கைது செய்ய முனையும்போது, அதற்கெதிராக கருத்து முன்வைத்து நீதிமன்றத்துக்கு செல்லாமல் இருக்க முடியும் என்பது அவருக்கான உரிமையாகும்.
இது கவலைக்குரிய விடயமல்ல. நீதிமன்றத்துக்கு ரஞ்சன் ராமநாயக்க எவ்வளவு அவமதிப்பு செய்திருக்கின்றார். அதுவும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னரே அவர் கைது செய்யப்பட்டார். கைது இடம்பெறுகையில் அரசாங்கம் தலையீடு செய்து அந்தக் கைதைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. வசந்த கரன்னாகொட என்பவர் போரிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய படை அதிகாரி.

அவர் இந்த நாட்டுக்காக எவருமே செய்ய முடியாத அளப்பரிய அர்ப்பணிப்பைச் செய்தவராக உள்ளார். போலியான வழக்கு தொடரப்பட்டமை குறித்து நீதிமன்றத்துக்கு கருத்து முன்வைத்திருக்கலாம். வசந்த கரன்னாகொட நீதிமன்றத்துக்கு தாம் சார்பான கருத்துகளை முன்வைத்திருக்கின்றாரா, இல்லையா? என்பதை நான் கேட்டு சொல்கின்றேன்” என்றார்.