நூற்றுக்கணக்கானோரின் உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கும் கரோனா வைரஸ், பாலியல் பலாத்காரத்தில் இருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளது.
சீனாவில் வூஹான் நகருக்கு அருகே ஜிங்ஷான் பகுதியைச் சேர்ந்த யி என்ற அந்த பெண்ணுக்கு நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், சீனாவில் தனியாக ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார் யி. இரண்டு நாட்களுக்கு முன்பு, அவரது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த கொள்ளையன், வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் கத்தி முனையில் கொள்ளையடித்துள்ளான். அப்பெண் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான்.
அவனிடம் இருந்து தப்பிக்க எவ்வளவோ போராடியும் அவனது பிடியில் இருந்து தப்பிக்க முடியாத நிலையில், திடீரென பெண்ணுக்கு ஒரு யோசனை உதித்தது.
தன்னால் முடிந்த மட்டும் பலமாக இருமிய அப்பெண், தான் வூஹானில் இருந்து வந்திருப்பதாகவும் தனக்கு கரோனா வைரஸ் பாதித்திருப்பதாகவும் அதனால்தான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார். இதைக் கேட்ட கொள்ளையன், அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.
இது பற்றி யி காவல்துறைக்கு புகார் கொடுக்க, உள்ளூர் ஊடகங்களில் இதுகுறித்து செய்தி வெளியிடப்பட்டு, கொள்ளையன் பற்றிய தகவல்களும் வெளியாகின. இதையடுத்து கொள்ளையன் தனது தந்தையுடன் காவல்நிலையம் வந்து சரண் அடைந்துள்ளான்