நடிகர் ரஜினிகாந்தை நீங்கள் யார் என கேட்டவர் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சாம்குமார். இவர் தனது எமஹா ஆர்.ஒன் 5 என்ற பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அதனை தூத்துக்குடியை சேர்ந்த சரவணன், விஜி என்ற இரண்டு திருடர்கள் திருடி அந்த வாகனம் விற்பனைக்கு இருப்பதாக ஒஎல்எக்ஸில் விளம்பரம் வெளியிட்டு இருந்தனர்.
இந்த விளம்பரத்தை பார்த்த சந்தோஷ் என்பவரும் அவரது நண்பர் மணி ஆகிய இருவரும் ஓ.எல்.எக்ஸ் விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ஒரு லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இந்த பைக்கை, திருட்டு பைக் எனத் தெரிந்து ஆர்.சி புக் இல்லாமல் வெறும் 17 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளனர்
சந்தோஷ் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, ஆறுதல் கூற வந்த நடிகர் ரஜினிகாந்தைப் பார்த்து நீங்கள் யார்? என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பைக்கை பறிகொடுத்த சாம்குமாரும் இந்த ஒஎல்எக்ஸ் விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது திருடர்கள் பைக் விற்பனையாகிவிட்டது என்று தெரிவித்தவுடன் யாரிடம் விற்பனை செய்யப்பட்டது ? நான் அதிகவிலை கொடுத்து வாங்க தயாராக இருக்கிறேன் என்று கூறி, பைக் வாங்கியவர்களின் விபரத்தைக் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார் சாம்குமார்.
பின்னர் அவர், சந்தோஷை தொடர்பு கொண்டு பேசியதில் அவரிடம் பைக் இருப்பது உறுதி செய்த பின் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சந்தோஷ், மணி, சரவணன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் விஜியை தேடி வருகின்றனர்.