என்னுடைய தெய்வம் பிரபாகரனே! அவர் மேல் வைத்த பாசமும் பற்றுமே என்னை அரசியல்வாதி ஆக்கியது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, February 26, 2020

என்னுடைய தெய்வம் பிரபாகரனே! அவர் மேல் வைத்த பாசமும் பற்றுமே என்னை அரசியல்வாதி ஆக்கியது

என்னுடைய தெய்வம் பிரபாகரனே! அவர் மேல் வைத்த பாசமும் பற்றுமே என்னை அரசியல்வாதி ஆக்கியது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
வவுனியா கோவில்குளம் கண்ணன் ஆலய அலங்கார நுழைவாயிலின் திறப்பு விழாவில் இன்று (புதன்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “தமிழர்கள் வடக்கு கிழக்கில் தனித்துவமான அடையாளத்தோடு வாழ்வதற்காக நீண்டகாலமாகப் போராடி வருகிறோம். தமிழர்களுக்காக ஜனநாயக ரீதியில் தந்தை செல்வநாயகம் அன்று பயணித்திருந்தார். அதன்பின்னர் பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடியிருந்தார்.
அந்த சூழ்நிலையை உருவாக்கியவர்கள் சிங்கள ஆட்சியாளர்களே. ஆயுதப் போராட்டம் மௌனிக்கபட்டதன் பின்னர் தமிழர்களைக் குலைப்பதற்காக அடிப்படைவாதத்தின் கீழான பல்வேறு செயற்பாடுகள் வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவருகின்றன.
தமிழர்களை அழிப்பதற்கு தமிழர்களுக்கு உள்ளேயே பல கட்சிகளை உருவாக்கி கட்சிகளுக்கும் அப்பால் மதங்களுக்கிடையில் முரண்பாடுகளை உருவாக்கி பிரிவினையை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தற்போது வேகமாக இடம்பெற்றுவருகின்றன.
2009 இற்கு முன்னர் தமிழர்கள் தமிழர்களாகவே இருந்தார்கள். தந்தை செல்வா எந்த மதம் என்று சிந்திக்கபட்டு அவரது கொள்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தலைவர் பிரபாகரன் என்ன மதம் என்று மக்கள் பார்க்கவில்லை. அங்கு கொள்கை, தியாகம் உறுதியாக இருந்தது. அதனால் மக்கள் பயணித்தார்கள்.
இன்று தமிழர்களின் கட்டமைப்புகளைப் பிரிக்கின்ற சூழல் இராஜதந்திர ரீதியில் இடம்பெற்று வருகின்றது. இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மன்னாரில் கடந்த சில நாட்களாக ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார். அவர் ஏன் இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஏதோ ஒரு பின்னணியில் தான் இருக்கிறார். அவராக இருப்பதாகத் தெரியவில்லை.
மக்கள் மத்தியில் கூட்டமைப்பு மீதான ஒரு அதிருப்தியான சூழலை ஏற்படுத்துவதற்கே அவர் இருப்பதாக அவரது நண்பர்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். இது தமிழ் மக்களின் தனித்துவத்தை குழப்புவதற்கான ஒரு நடவடிக்கை.
திருக்கேதீச்சர வளைவு விடயத்தில் இரு தரப்புடனும் நான் கதைத்திருந்தேன். முரண்பட்டு எமது தனித்துவத்தை சவால்படுத்தாமல் பேசித் தீர்குமாறு தெரிவித்திருந்தேன். அதற்காக பல முயற்சிகளையும் எடுத்தேன்.
என்னைப் பொறுத்தவரை என்னுடைய தெய்வம் பிரபாகரனே. அவர் மேல் வைத்த பாசமும் பற்றுமே என்னை அரசியல்வாதி ஆக்கியது. அது ஒரு விபத்தே. எனவே மக்கள் தெளிவாக இருக்கவேண்டும். ஒற்றுமையை முன்னெடுக்க வேண்டும். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பிரஸ்தாபிப்பவர்களைப் பார்த்தால் தேசிய கட்சிகளோடு பயணிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இதே அரசாங்கம் ஐ.நா. செயலாளர் பான்கீமூனை அழைத்து பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவதாக வாக்குறுதி வழங்கியிருந்தது. ஆனால்தாம் தனித்துமானவர்கள் என்ற சிந்தனையை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டுபோய் எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக ஐ.நா. தீர்மானத்தை தற்போது மறுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க இருக்கிறார்கள்.
அன்று தமிழ் மக்களிடம் இருந்த ஒற்றுமை என்ற பயம் இன்று அரசாங்கத்திற்கு இல்லை. எமது பலம் குறைந்துகொண்டே போகின்றது” எனத் தெரிவித்தார்.