ஐ.நா. பிரேரணையில் இருந்து விலகல்: பாரிய பாதிப்புக்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது- மங்கள - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, February 29, 2020

ஐ.நா. பிரேரணையில் இருந்து விலகல்: பாரிய பாதிப்புக்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது- மங்கள

இலங்கை தொடர்பான ஐ.நா. பிரேரணையின் அனுசரணையில் இருந்து விலகிக்கொள்வதால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாரிய பாதிப்புக்களைத் தவிர்க்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை தொடர்பான ஜெனீவா யோசனையில் இலங்கையும் அனுசரணை வழங்குவதற்கான முடிவு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலேயே எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பான ஜெனீவா யோசனையின் இணை அனுசரணையில் இருந்து இலங்கைL விலகிக்கொண்டமை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில், “2015இல் இலங்கை கடுமையான நெருக்கடிக்குள் இருந்தபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அரசாங்கம் 100 நாட்கள் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

இதனடிப்படையில் சர்வதேசத்தில் இலங்கைக்கு இருந்த நெருக்கடிகளைச் சமாளிக்கும் வகையில் ஜெனீவாவின 30/1 யோசனைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியது.

இதன்காரணமாக இலங்கையின் இறைமை, மீள் எழுச்சி, கௌரவம் என்பன பாதுகாக்கப்பட்டன. இழந்துப்போன மதிப்பை இலங்கை மீண்டும் பெற்றுக்கொண்டது. அத்துடன் இலங்கை தம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் விடயத்தை உறுதிசெய்யும் செயற்பாட்டை சர்வதேசத்திடம் கையளிக்காமல் தாமே வைத்துக்கொள்ளக் கூடியதாக இருந்தது.

இந்த இணை அனுசரணை 2015 ஒக்ரோபர் முதலாம் திகதி வழங்கப்பட்டது. இந்த யோசனைக்கு இலங்கையின் இணை அனுசரணையை வழங்குவற்கு முன்னர் அது தொடர்பாக பெரிதும் தொலைபேசி மூலமாகவே கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இதன்போது நானும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நியூயோர்க்கில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்தோம். இந்நிலையில் இலங்கையில் இருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளியுறவுச் செயலாளர், அமரிக்காவுக்கான தூதுவர், பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் ஆகியோருடன் கலந்தாலோசித்தே இறுதி முடிவும் எடுக்கப்பட்டது.

இதனையடுத்தே இணை அனுசரணை முடிவு ஐக்கிய நாடுகள் ஜெனீவா அலுவலகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டது. இலங்கை தமது பிரச்சினைக்கான தீர்வை சர்வதேசத்தின் தொழில்நுட்ப உதவியுடன் தாமே தீர்த்துக்கொள்வது, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட இராணுவம், பொலிஸார் தொடர்புடைய மனித உரிமை மீறல்கள் குறித்து உள்ளூரில் அமைக்கப்படும் நடைமுறையின் கீழ் தீர்வைக் காண்பது. சர்வதேசத்துடன் இணங்கிய உறவைக் கொண்டுசெல்வது என்ற மூன்று அடிப்படையிலேயே இந்த இணை அனுசரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அந்த அனுசரணையில் இருந்து விலகிக்கொள்வதால் பாரிய பாதிப்புக்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது” என மங்கள சமரவீர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.