கிழக்கு மாகாணத்தில் மிக வேகமாக தமிழர்களின் விகிதாசாரம் குறைகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்தபோது திருகோணமலையில் 90 வீதம் இருந்த தமிழர்களின் எண்ணிக்கை, இன்று 40 வீதமாகி விட்டது. அம்பாறையில் 18, 19 வீதமாகி விட்டது. மட்டக்களப்பில் 75 வீதமாக உள்ளது. மக்கள் தொகை பெருக்க வீததத்தில் முஸ்லிம்கள் 8.5 வீதம் (1000 பேரில்) பெருக்கமடைகிறார்கள். சிங்களவர்கள் 5.7 வீதம் பெருக்கமடைகிறார்கள். தமிழர்கள் 1.2 வீதத்தால் குறைவடைந்து செல்கிறார்கள் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பிரமுகர் க.சர்வேஸ்வரன்.
பருத்தித்துறையில் நேற்று நடந்த சமகால அரசியல் கருத்தரங்கில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு இணைப்பு இல்லையென சொன்னபோது, இதற்கு ஏன் தலையாட்டினீர்கள் என நாம் கேட்டபோது, முஸ்லிம்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்கள். முஸ்லிம்கள் தமக்குரிய கோரிக்கைகளை வைக்கலாமே தவிர, தமிழர்களின் கோரிக்கைகளை நிராகரிக்க முடியாது. முஸ்லிம்களிற்கு அம்பாறையை மையமாக வைத்து ஒரு தனி அலகை பற்றி பேசலாம். ஆனால், எமது கோரிக்கைகளை தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமக்கான நிரந்தரதீர்வு கிடைக்கும்வரை கூட்டமைப்பு பலமான அமைப்பாக திகழ வேண்டுமென்பதற்காக ஈ.பி.ஆர்.எல்.எவ் பல முயற்சிகளை மேற்கொண்டது. கூட்டமைப்பிற்குள் பல கட்சிகள் இருந்தன. பல கட்சிகள் சேரும் போது, அவை தோளோடு தோள் நின்று, தோழமையுடன் செயற்படும் விதமாக கூட்டமைப்பு அமைக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்படவில்லை.
வயதில் மூத்தவர் என்பதால் சம்பந்தன் தலைவராக ஏற்கப்பட்டாரே தவிர, அவர் சட்டபூர்வமாக தலைவராக தெரிவு செய்யப்படவில்லை. அந்த கூட்டமைப்பிற்கு செயலாளர் கிடையாது. பொருளாளர் கிடையாது. உத்தியோகபூர்வ சின்னம் கிடையாது.
தமிழ் மக்களின் அதிகார பகிர்வு கோரிக்கையை வெல்வதென்றால் பல முனைகளில் செயற்பட வேண்டும். அது கடினமான பணி. விடுதலைப் புலிகளிடம் ஆயுத வலு இருந்தபோது, பேரம் பேசும் வலு இருந்தது. இப்பொழுது எம்மிடம் அப்படியான வலுவில்லை.
70 வருட கோரிக்கை அதிகார பரவலாக்கல் விவகாரம். அதைவிட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயமுள்ளது. யுத்தத்தினால் கணவனை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளன. யுத்தத்தினால் அங்கங்களை இழந்தவர்கள் உள்ளனர். 70000 ஏக்கரிற்கு அதிக நிலத்தை இராணுவம் பிடித்து வைத்துள்ளது.
இப்படியான பெரிய பிரச்சனைகள் உள்ளபோது கூட்டமைப்பு எப்படி செயற்பட வேண்டும்? தேர்தல் நேரத்தில் மட்டும் கூட்டமைப்பாக செயற்படும். தேர்தல் முடிந்ததும், தமிழரசுக்கட்சி தனித்து செயற்பட தொடங்கும்.
சாதாரண வாசகசாலை, கோயில் குழுக்களில் கூட யாப்பு உள்ளது. ஆனால் 35 இலட்சம் தமிழ் மக்களிற்கு வழிகாட்ட வேண்டிய இந்த கூட்டமைப்பிடம் ஒன்றும் கிடையாது. ஒரு துண்டு, துணிகூட கிடையாது. தமிழ் அரசு கட்சியின் பின்னால் வருவதென்றால் வாருங்கள், அல்லது போய் விடுங்கள் என்பார்கள்.
கூட்டமைப்பிலிருந்து முதலில் காங்கிரஸ் வந்தது. பின்னர் பழம் பெரும் தலைவர்கள் சிற்றம்பலம் போன்றவர்கள் வந்தார்கள். பின்னர் விக்னேஸ்வரன் வந்தார். நாங்கள் வந்தோம். ரெலோவிலிருந்து ஒரு பகுதி வந்தது. ஏன்? அங்கு யாப்பில்லை. கலந்துரையாடல்கள் இல்லை. முக்கியமான விடயங்களை, அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடப்படுவதில்லை. கூட்டம் கூட்ட வேண்டுமெனில், தொலைபேசியில் அழைத்தால் பதிலிருக்காது. கடிதம் போட்டால் பதிலில்லை. பத்திரிகைகளில் அறிக்கை விட்ட பின்னர், கூட்டம் கூட்டப்படும். அங்கும் நக்கலாக பேசுவார்கள். தாங்கள் நினைத்ததைத்தான் செய்வார்கள்.
தமிழ் அரசு கட்சிக்குள் கூட கலந்துரையாடப்படுவதில்லை. மேலுள்ள சிலர்தான் முடிவெடுத்து, மற்றவர்கள் மீது திணிப்பார்கள்.
2015ம் ஆண்டு அடுத்த தீபாவளி பொங்கலிற்குள் தீர்வு என்றார்கள். நாடாளுமன்றத்தை அரசியல் யாப்பு நிர்ணயசபையாக மாற்றினார்கள். தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்றதிகார ஒழிப்பு, அதிகார பகிர்வு பற்றி நடவடிக்கெயடுக்கப்படும் என்றார்கள். மற்றைய இரண்டையும் செய்வதற்காகவே, அதிகார பரவலாக்கல் பற்றி ஏமாற்றுத்தனமாக பேசினார்கள். மற்றைய இரண்டையும் செய்தனர். நான்கரை வருடமாகியும், புதிய அரசியல் யாப்பு விடயத்தில் ஒன்றும் நடக்கவில்லை.
வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி அடிப்படையிலான தீர்வு, வடக்கு கிழக்கில் பௌத்தம் முதன்மையாக இருக்கக்கூடாது, காணி, பொலிஸ் அதிகாரம் எமக்கு தேவை ஆகிய விடயங்களை அரசுடன் பேசி, முதலில் அதில் இணக்கப்பாட்டை பெறுங்கள் என நாம் சம்பந்தனிடம் கூறினோம். ஆனால், வடக்கு கிழக்கை இணைக்க முடியாது என அரசு சொன்னதை ஏற்றார்கள். இலங்கை ஒற்றையாட்சியென்பதை ஏற்றுக்கொண்டார்கள். பௌத்தம் முதன்மையானதென்பதை தமிழர்கள் ஏற்றார்கள் என சுமந்திரன் பாராளுமன்றத்தில் பேசினார். இதற்காகவா நாம் இதுவரை போராடினோம்?
நான்கரை வருடமாக நீங்கள் இதுவரை எதையும் பெறவில்லை. மாறாக தமிழர்களின் அடிப்படை கோட்பாடுகளை விட்டுக் கொடுத்துள்ளீர்கள்.
இடைக்கால அறிக்கையில், தமிழ் மக்களின் அதிகார பரவலாக்கல் தொடர்பாக எல்லா கட்சிகளும் ஏற்றுக்கொண்டதாக ஒரு விடயமும் இல்லை. ஒவ்வொரு விடயத்திலும் ஒவ்வொரு கட்சிகளும் சொன்ன விடயங்களின் தொகுப்பே தவிர, வேறொன்றும் இல்லை.
வடக்கு கிழக்கு இணைப்பு இல்லையென சொன்னபோது, இதற்கு ஏன் தலையாட்டினீர்கள் என நாம் கேட்டபோது, முஸ்லிம்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்கள். முஸ்லிம்கள் தமக்குரிய கோரிக்கைகளை வைக்கலாமே தவிர, தமிழர்களின் கோரிக்கைகளை நிராகரிக்க முடியாது. முஸ்லிம்களிற்கு அம்பாறையை மையமாக வைத்து ஒரு தனி அலகை பற்றி பேசலாம். ஆனால், எமது கோரிக்கைகளை தடுக்க முடியாது.
ஆனால், அந்த கூட்டத்தில் சம்பந்தன், சுமந்திரன் அதை மறுத்து, கொஞ்சக்காலம் பொறுக்கலாம். பின்னர் பார்க்கலாம் என்றார்.
கிழக்கு மாகாணத்தில் மிக வேகமாக தமிழர்களின் விகிதாசாரம் குறைகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்தபோது திருகோணமலையில் 90 வீதம் இருந்த தமிழர்களின் எண்ணிக்கை, இன்று 40 வீதமாகி விட்டது. அம்பாறையில் 18, 19 வீதமாகி விட்டது. மட்டக்களப்பில் 75 வீதமாக உள்ளது. மக்கள் தொகை பெருக்க வீததத்தில் முஸ்லிம்கள் 8.5 வீதம் (1000 பேரில்) பெருக்கமடைகிறார்கள். சிங்களவர்கள் 5.7 வீதம் பெருக்கமடைகிறார்கள். தமிழர்கள் 1.2 வீதத்தால் குறைவடைந்து செல்கிறார்கள்.
ஒரு குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள் பெற்றால் அது அதிகரிப்புமல்ல, வீழ்ச்சியுமல்ல. பெற்றோர் தமது இடத்தில் இரண்டு பேரை விட்டுச் செல்கிறார்கள். அது அதிகரிப்புமல்ல, வீழ்ச்சியுமல்ல.
அடுத்த 10 வருடத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி விடலாம், அந்த மாகாணத்தை கைப்பற்றலாமென அவர்கள் நினைக்கிறார்கள்.
ஒற்றையாட்சிக்குள் அதிகார பகிர்வு தோல்வியடைந்தது என்பதை மாகாணசபைக்குள்ளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. மாகாணசபைக்கு 37 அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறிப்பதே ஒற்றையாட்சி. ஆனால், ஒற்றையாட்சியை சம்பந்தன், சுமந்திரன் ஏற்றுக்கொண்டார்கள். அது பற்றி கேட்டால், சமஷ்டியென்றால் சிங்களவர்களிற்கு பிடிக்காது என்பதால் சமஷ்டியை ஒளித்து வைத்துள்ளோம் என்றார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமல்ல.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் எமக்குமுள்ள வித்தியாசம் என்னவென்றால், தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொன்ன வாக்குறுதிகளை விற்றுவிட்டு அவர்கள் நிற்கிறார்கள். இந்த இடத்தில்தான் எங்களிற்கும் அவர்களிற்குமான வித்தியாசம் உள்ளது. இதனால்தான் மாற்றுத்தலைமை உருவானது. மாற்றுது்தலைமை உருவாகுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் காரணம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை பலமாக மாற்ற முயன்று உதைந்து தள்ளப்பட்டவர்கள் நாங்கள். இன்று கற்றறிந்த மக்கள் அதை புரிந்து கொண்டு ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழ் அரசு கட்சி தன்னை வளர்க்க முயன்றத தவிர, கூட்டமைப்பை பலமாக மாற்ற முயலவில்லை. நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களை நேர்மையாக நிறைவேற்ற முயல்வோம்.
நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதையும் சொல்கிறோம். நிலப்பிரச்சனையை எப்படி கையாள்வதென்பதை செயற்படுத்த ஒரு குழு உருவாக்குவோம். இதை சட்டபூர்வமாக செயற்படுத்துவதா அல்லது சர்வதேச அழுத்தங்களின் மூலம் செயற்படுத்துவதா என்பதை தீர்மானித்து, சரியான முறையில் செயற்படுத்துவோம்.
தீர்வு தொடர்பாக முறையான வெளியுறவு கொள்கையை வகுப்போம். நாமும், அரசும் வெளிநாட்டு தலையீடின்றி பேசி பலனில்லை. இனப்பிரச்சனை இருப்பதாகவே கோட்டா சொல்லவில்லை. தேசிய பாதுகாப்பு முக்கியமென தேர்தல் பிரச்சாரத்தில் கோட்டா சொன்னார். தேவாலயத்தில் குண்டு வெடித்து விட்டதாம். கடந்த 10 வருடத்தில் வடக்கு கிழக்கில் பட்டாசு கூட வெடிக்கவில்லை. தேசிய பாதுகாப்பு என்பது பெரிய வார்த்தை. பெரிய அர்த்தங்களையுடையது. இந்தியா தேசிய பாதுகாப்பு என்றால் அதில் அர்த்தமுள்ளது. நீண்ட சீன, பங்களாதேஷ், பாகிஸ்தான் எல்லைகளையுடையது. அதில் பிரச்சனைகளுண்டு. இலங்கையை சுற்றி கடல். எந்த நாட்டுடனும் பிரச்சனையில்லை. கோட்டா சொன்ன தேசிய பாதுகாப்பின் அர்த்தம் தமிழ் மக்களை அடக்கியாள்வது.
வடக்கில் 2 இலட்சம் படையினர் உள்ளனர். அதாவது ஒரு குடும்பத்திற்கு ஒரு இராணுவத்தினர் உள்ளார்.
வடக்கு, கிழக்கை சிங்கள பௌத்த மயமாக்குவதற்கான ஒரு முகமூடிதான் தேசிய பாதுகாப்பு. இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்டால், உங்களிற்கு இங்கு இராணுவத்தினர் தேவையில்லை. கொஸ்ராரிகா என்ற நாட்டில் இராணுவமே இல்லை. .ராணுவத்தை வைத்து தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவத்தை வடக்கு கிழக்கில் வைக்கவே முயற்சிக்கிறார்கள்.
அபிவிருத்திதான் முக்கியமானது என கோட்டா சொல்கிறார்கள். நாங்கள் இங்கு சோற்றுக்குத்தான் சண்டை பிடிக்கிறோம் என நினைக்கிறார் என்றார்.