திருட்டுக்காக அல்ல திருடர்களை பிடிக்க முயற்சி செய்ததினாலேயே சிறையில் உள்ளேன்: ரஞ்சன் பாராளுமன்றில் கருத்து - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, February 18, 2020

திருட்டுக்காக அல்ல திருடர்களை பிடிக்க முயற்சி செய்ததினாலேயே சிறையில் உள்ளேன்: ரஞ்சன் பாராளுமன்றில் கருத்து

திருடர்களை பிடிப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கையினாலே நான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றேன். மாறாக திருட்டு மோசடிக்காக அல்ல என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

பிரதான நடவடிக்கையாக சபாநாயகரின் அறிவிப்பின்போது ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டு தொடர்பாக தெரிவிக்கப்பட்டபோது, சபையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. இதன்போது சபைக்குள் வந்த ரங்சன் ராமநாயக்க ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

என்னிடமுள்ள குரல் பதிவுகளில் தெரிவு செய்யப்பட்ட சில குரல் பதிவுகளை சபையில் சமர்ப்பித்தேன். அந்த குரல் பதிவுகளில் முன்னாள் ஜனாதிபதிகள் , தற்போதுள்ள பிரதமர் , அமைச்சர்கள் , அவர்களின் மனைவிமார்களின் குரல் பதிவுகள் இருக்கின்றன. என்னை 14 ஆம் திகதி கைது செய்தனர். நான் தற்போது விளக்க மறியலில் இருக்கின்றேன்.

அத்துடன் நான் சிறையில் உதயங்க வீரதுங்க மற்றும் எயார் லங்காவிலிருந்த கபில சந்திரசேன ஆகியோருக்கிடையிலேயே இருக்கின்றேன்.

நான் எந்த திருட்டு மோசடியிலும் ஈடுபட்டவன் அல்ல. திருடர்களை பிடிக்கவே நான் செயற்பட்டேன். நாங்கள் திருடர்களை பிடிப்பதாக 2015 தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தோம். ஆனால் அதனை செய்யாத காரணத்தினாலேயே நீதிபதிகளுடன் கதைத்தேன். பௌசி எம்.பியை ஒரு மணித்தியாலமாவது சிறையில் போடுமாறே நான் கூறினேன். திருடர்களை பிடிக்கும் வேலைத்திட்டத்தில் ஒரு பகுதியை மட்டுமே நான் செய்தேன் என்றும் அவர் கூறினார்.