வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுமடு அலகல்லு குளக்கரையில் காயமடைந்த நிலையில் காட்டு யானையின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எல்லையோர கிராமமாக காணப்படும் ஒலுமடு கிராமம் யானைகளின் நடமாட்டம் அதிகமாகவே காணப்படுகின்றது.
இக் கிராமத்தில் வேட்டைக்குச் சென்றவர்கள் அல்லது வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துவக்கு வெடித்ததனாலேயே யானை இறந்துள்ளதாகவும் ஐந்து நாட்களுக்கு முன்னரே இறந்திருக்கலாம் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களும் வன பாதுகாப்புத் துறையினரும், அப்பகுதி கிராமசேவையாளர் மா.சுரேந்திரன் ஆகியோர் ஆராய்ந்து வருகின்றனர்.
இதே வேளை வவுனியா வடக்கு காஞ்சிராமோட்டை, ஒலுமடு, சேனைப்புலவு, மருதோடை ஊஞ்சால்கட்டி, வெடிவைத்தகல் போன்ற எல்லையோரக் கிராமங்களில் விவசாய பயிர்களையும் காட்டு யானைகள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.