அரசியலுக்கு விடைகொடுக்கிறார் சம்பந்தன்? கூட்டமைப்பிற்குள் வெடிக்கும் மோதல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, January 7, 2020

அரசியலுக்கு விடைகொடுக்கிறார் சம்பந்தன்? கூட்டமைப்பிற்குள் வெடிக்கும் மோதல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தனது அரசியல் வாழ்க்கைக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் விடைகொடுக்க தீர்மானித்துள்ளார்.

இந்நிலையில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. சம்பந்தனின் ஓய்வின் பின் வெற்றிடமாகும் தலைமைத்துவத்தை எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்குவதற்கு தயாராக இருப்பதே இதற்கான காரணமாகும்.

இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே, கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களை இணைத்துகொண்டு தமிழர் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளதாகஈ.பி.ஆர்.எல் எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு பகுதியில் நேற்று கட்சியினுடைய அலுவலகம் ஒன்றைத் திறந்து வைத்து பின் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்” என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, 1977ம் ஆண்டிலிருந்து நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்துவரும் இரா.சம்பந்தன், 2001ம் ஆண்டிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார்.

மேலும், இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவிவகித்த இரண்டாவது தமிழர் என்கிற பெருமையையும் இரா.சம்பந்தன் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.