தனது உயிரை இழந்து பலரை வாழ வைக்கும் இலங்கை அகதிச் சிறுவன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, January 31, 2020

தனது உயிரை இழந்து பலரை வாழ வைக்கும் இலங்கை அகதிச் சிறுவன்!

விபத்தில் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்த இலங்கை அகதி சிறுவனின் உடலுறுப்புகள், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் தெரியவருகையில்,

இந்தியாவின் வேலூா் மாவட்டம் பாலாறு அணைக்கட்டு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த சின்னப்பா – சிவகாந்தி தம்பதியின் மகன் ஜீவராஜ் (13) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 28ம் திகதி அங்குள்ள உயரமான சுவற்றில் ஏறியபோது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்து ஜீவராஜ் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று (30) மூளைச்சாவு அடைந்ததை வைத்தியர்கள் உறுதி செய்தனா்.

இதையடுத்து, பெற்றோா் சம்மதத்தின்பேரில் ஜீவராஜின் இதயம், நுரையீரல், குடல், சிறுநீரகங்கள், கண்கள் போன்ற உறுப்புகள் வேலூா் சிஎம்சி, குளோபல், சென்னை காவேரி, அப்பல்லோ ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன.

ஜீவராஜின் பெற்றோரின் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புக்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதால் பலரும் அதனால் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் பரவ பலரும் ஜீவராஜின் பெற்றோருக்கு பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

"இறந்தாலும் உங்கள் மகன் பலரது உருவத்தில் உயிருடன்தான் உள்ளான்" என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.