செல்லப்பிள்ளை மகேந்திரன்னின் இரகசிய ஆவணம்
1974ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18ம் திகதி மட்டக்களப்பிலுள்ள மொறக்கொட்டாஞ்சேனை கிராமத்தில் ஏழு பிள்ளைகளில் ஒருவராக மகேந்திரன் பிறந்தார். அவருடைய தந்தை சீவல் தொழில் செய்பவராக இருந்த போதும் அவரால் அத்தொழிலை செய்ய முடியாதிருந்தது. இதனால் அவர் குடும்பம் ஏழ்மையிலேயே வாழ்ந்தது. குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் எண்ணத்துடன் குடும்பம் வந்தாறுமூலைக்கு இடம்பெயர்ந்தது.
ஏழ்மை காரணமாக மகேந்திரனை தவிர ஏனைய பிள்ளைகள் எவரும் பள்ளிக்கூடம் போகவில்லை. மகேந்திரன் பத்து வயதுவரை பள்ளிக்கூடம் சென்றார். இருந்தும் அவருடைய எழுத்தறிவும் குறைவாகவே இருந்துள்ளது. மேலே குறிப்பிட்ட வாக்குமூலத்தில் தான் படித்த பள்ளிக்கூடத்தின் பெயர் நினைவில்லை என்றே அவர் சொன்னார். அவர் பிறந்த திகதியையும் அவர் தவறாகவே அதில் சொல்லியிருக்கிறார்.
போர் காரணமாகவும் சிறிலங்கா இராணுவத்தின் கெடுபிடிகள் காரணமாகவும் குடும்பங்கள் இளையோரை வீட்டினுள்ளேயே பூட்டி வைத்திருந்த காலமது. அப்போது மகேந்திரன் பதின்ம வயதினராக இருந்தார். 1990இல் விடுதலைப்புலிகள் அவரை அமைப்பில் இணைத்தார்கள். இரண்டு வருடங்கள் விடுதலைப்புலிகள் பாசறையில் அவர் தொட்டாட்டு வேலைகள் மட்டுமே செய்தார். இரண்டு வருடங்களில் பாசறையிலிருந்து தப்பியோடிவிட்டார்.
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து தப்பியோடி சில மாதங்களில் ஒரு பெண்ணை காதலித்து மணந்து கொண்டார். இப்போது அவருடைய தாய் தந்தையர் குடும்பம் மீண்டும் அவர்களின் சொந்த இடமான மொறக்கொட்டாஞ்சேனைக்கு சென்றுவிட்டார்கள். மகேந்திரன் அவருடைய மனைவியின் குடும்பத்துடன் வந்தாறுமூலையில் தங்கியிருந்தார். அவர்கள் தம்பதிகளாக இணைந்திருந்து மூன்று நாட்கள்தான். அப்போது இராணுவம் நடத்திய ஒரு சுற்றிவளைப்பில் மகேந்திரனும் கைதாகினார்.
அன்றைய காலத்தில் இவ்வாறான கைதுகள் தலையாட்டிகள் அடையாளம் காட்டுவதன் மூலமே நடத்தப்படும். மகேந்திரனும் அவ்வாறுதான் கைதுசெய்யப்பட்டார். இவையெல்லாம் மகேந்திரன் விடுதலைப்புலிகள் பாசறையில் இருந்து தப்பியோடி வந்து நான்கு மாதங்களுக்குள் நடந்தது.
கொடிய சித்திரவதைகள் மூலம் அவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தை வைத்தே அவருக்கு ஆயுள் தண்டனையும் மேலதிகமாக 70 ஆண்டுகள் சிறையும் கொடுக்கப்பட்டிருந்தது.
மகேந்திரனின் குடும்பத்திடம் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்ட ஒரு குறிப்புபுத்தகம் இருக்கிறது. அதில் அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனைகள் பதியப்பட்டிருக்கிறது. ஆனால் என்ன குற்றத்திற்காக அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டது என்று எதுவும் பதியப்படவில்லை.
சில மாதங்களுக்கு முன்னர் மகேந்திரனின் குடும்பத்தினுடைய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரன் மகேந்திரனின் நிலமையை பற்றி எழுதச்சொல்லி பிபிசி தமிழ் ஊடகவியலாளரை கேட்டார். பிபிசியும் குடும்பத்தை விசாரித்து மகேந்திரனின் கதையை செய்தியாக வெளியிட்டது.
மகேந்திரனின் நிலமை பற்றி நாடாளுமன்றத்திலும் வியாழேந்திரன் உரையாற்றினார். தொடர்ந்து மட்டக்களப்பு பொலிசார் மகேந்திரனின் குடும்பத்திடம் சென்று கதைத்தார்கள். மகேந்திரன் விடுதலை செய்யப்பட்டால் அவர் தங்குவதற்கு இடமுண்டா என்று விசாரித்ததாக குடும்பத்தவர் சொன்னார்கள். அப்போதைய சனாதிபதி சிரிசேனா 100 கைதிகளுக்கு விடுதலை கொடுக்க எண்ணுவதாகவும் மகேந்திரனும் அதில் ஒருவர் என்றும் பொலிசார் குடும்பத்திற்கு சொன்னார்கள்.
2006ம் ஆண்டு மகசீன் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் வாக்குமூலத்தை இரகசியமாக எழுத்தில் பதிவுசெய்து அன்று நடாளுமனற உறுப்பினராக இருந்த கிட்டினன் சிவநேசனிடம் கொடுத்தார்கள்.
ஒரு சிடியில் பதிவு செய்யப்பட்ட இவ் வாக்குமூலங்களை சிவநேசன் ஐயா 2006ம் ஆண்டு வன்னியில் இருந்த மனிதவுரிமை ஆர்வலர்களிடம் கொண்டுவந்து கொடுத்தார்.
ஒரு சிடியில் பதிவு செய்யப்பட்ட இவ் வாக்குமூலங்களை சிவநேசன் ஐயா 2006ம் ஆண்டு வன்னியில் இருந்த மனிதவுரிமை ஆர்வலர்களிடம் கொண்டுவந்து கொடுத்தார்.
(சிவநேசன் ஐயா 2008 மார்ச் மாதம் சிறிலங்கா இராணுவத்தின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.)
சிவநேசன் ஐயாவுக்கு கொடுக்கப்ட்ட 2006ம் ஆண்டு வாக்குமூலத்தில் எவ்வாறு அவர் சித்திரவதை செய்யப்பட்டார் என்பதை அவர் விபரித்திருக்கிறார்.
சிறையில் மகேந்திரன் பூட்ஸ் காலால் உதைக்கப்பட்டதால் அவருடைய முகம் வீங்கியிருந்ததாக அவர் சொல்லியிருக்கிறார். அவருடைய கைகள் பின்னால் கட்டப்பட்டு அவர் தலையை தண்ணீருக்குள் பல நிமிடங்கள் அழுத்தி வைத்தார்கள். அவர் தலை பொலித்தீன் பையால் மூடப்பட்டு அது அவருடைய கழுத்தை சுற்றி இறுக்கப்பட்டது. அவர் நிர்வாணமாக்கப்பட்டு அவருடைய நெஞ்சில் கொட்டாந்தடியால் அடித்தார்கள்.இராணுவத்தினரின் உடைகளை சுத்தம் செய்யவும் அவர்களுடைய பூட்சுகளை மினுக்கவும் அவருக்கு கட்டளை கொடுக்கப்பட்டது.
அத்துடன்,
தான் மட்டக்களப்பு சிறையில் ஒரு வருடம் வைக்கப்பட்டிருந்த 1993 காலத்தில் 15 கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதை தான் பார்த்ததாக சொல்லியிருந்தார். அவர்களின் உடல்கள் சிறைச்சாலையிலிருந்த ஒரு கிணற்றினுள் போட்ப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
19 வயதில் எந்த குற்றமும் செய்யாமல் கைதுசெய்யப்பட்ட மகேந்திரன் பலரின் முயற்சியின் பின்னரும் படுகொலைகளின் சாட்சி என்ற ஒரே காரணத்திற்காக 25 ஆண்டுகள் சிறையில் இருந்தே காலமானார்.
இன்று சிறிலங்காவின் சிறைகளில் வாடும் அதிகமாக தமிழ் அரசியல் கைதிகள் மகேந்திரன் போன்று படுகொலைகளின் சாட்சி என்பதற்காகவே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
செல்லப்பிள்ளை மகேந்திரன் இரகசியமாக வழங்கியிருந்த வாக்குமூலத்தை இங்கு முழுமையாகப் பார்க்கலாம்