குமார் பொன்னம்பலத்தின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் இதுவரையில் தண்டிக்கப்படவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் ஞாபகார்த்த உதைபந்தாட்டப் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், குமார் பொன்னம்பலம் ஐயாவின் படுகொலை தொடர்பாக இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. விசாரணை நடத்தப்படவேண்டும் என்று தமிழ் தலைமைகளும் வலியுறுத்தவில்லை.
இதனிடையே, இலங்கை அரசாங்கத்தோடும் சில சர்வதேச சக்திகளோடும் சேர்ந்து தமிழ் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு அவர்கள் போட்ட கணக்கை நிறைவேற்றுவதற்காக குமார் பொன்னம்பலம் ஐயாவின் படம் அகற்றப்பட்டது.
உண்மையில், குமார் பொன்னம்பலம் ஐயா மறையாமல் இருந்திருந்தால் விடுதலைப் புலிகளின் அரசியல் பேச்சுவார்த்தைகளின் போது புலிகள் தரப்பின் கோரிக்கையை வலுப்பெறச் செய்திருப்பார்.
நிச்சயமாக ஜனநாயகக் குரலும் விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குரலும் ஒன்றாக இருக்கும்போது தமிழர்களுக்கான விடிவு சாத்தியமாகியிருக்கும். இந்த பௌத்த பேரினவாத வன்முறைகள் சிலவேளையில் ஓரளவுக்கு ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படக்கூடிய சூழலை கொண்டுவந்திருக்கக் கூடும். முள்ளிவாய்க்கால் என்ற ஒன்று ஏற்படாது இருந்திருக்கும்.
ஆனால் இன்று யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதும் நாம் விடுதலைபெறமுடியாத நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்