‘வைரஸ்’ ஒரு எளிய விளக்கம்: வாசித்து பயன்பெறுங்கள், பகிருங்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, January 28, 2020

‘வைரஸ்’ ஒரு எளிய விளக்கம்: வாசித்து பயன்பெறுங்கள், பகிருங்கள்

இந்த வைரஸ் வைரஸ் என்டுறாங்களே அது என்ன?
உங்களுக்கு இலகுவாகச் சொல்லனுமென்டா, உறங்கநிலையில் இருக்கும் ஒரு உடல் இல்லாத உயிர் என்று சொல்லலாம்.
ஆம், பக்டீரியாவை எடுத்துக்கொண்டால் அதற்கென ஒரு உடல் போன்ற அமைப்பும் தனியான தொழிற்பாடு கூறும் இருக்கும். அன்டிபயற்றிக் மருந்துகள் பாக்டீரியாவின் அமைப்பை அல்லது தொழிற்பாடு களை சிதைத்துக் கொன்றுவிடும்.
ஆனால் நம்ம வைரசுக்குத்தான் இரண்டுமே சுயமாக இல்லையே, சோ அவருக்கெதிராக மருந்து உருவாக்குவதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.
சரி, உடலும் இல்லை சுயமான தொழிற்பாடு மில்லை பிறகெப்படி பல்கிப் பெருகி உயிராபத்துக்களை ஏற்படுத்துகின்றன என நீங்கள் கேட்பது புரிகிறது.
அவை வெறும் நிறமூர்த்த அலகுபோல தொழிற்பாட்டுக்குத் தேவையான மெமரிகளைக்கொண்ட துணிக்கைகளாக வெளியில் காணப்படும். ஒரு பென்ட்ரைவில் இருக்கும் சொப்ட்வெயார் போல நினைத்துக்கொள்ளுங்கள். அந்த சொப்ட்வெயார் பென் ட்ரைவில் இருக்கும்வரை எதுவும் செய்யாது. ஆனால் ஒரு கணணியில் பென் ட்ரைவை இணைத்தும் தொழிற்படும்.
அதேபோல்தான் வைரசும். வெளியில் அதுபாட்டுக்குக் கிடக்கும். ஒரு மனித/மிருக உடலில் புகுந்ததும் தன் வேலையைக் காட்டத்தொடங்கிவிடும்.

அதுக்குத்தான் உடல் இல்லையல்லவா சோ அது மனித உடலின் செல்களுக்குள் புகுந்து அதன் மெமரியில் இருக்கும் தொழிற்பாட்டு ஞாபகக்குறிகளை மனித செல்களின் தொழிற்பாட்டைப் பயன்படுத்தி பல்கிப் பெருக்கும். இவ்வாறு பல்கிப் பெருகும் வைரஸ் ஒவ்வொரு செல்லாக பரவி உடல் முழுவதும் பரவும்.
இதன்போது நம் உடலின் நிர்ப்பீடணம் உடனே அலர்ட் ஆகி வைரஸ் தொற்றிய மனித செல்களை அட்டாக் பண்ணி வைரசை அழிக்கும்.
வைரசு க்கும் உடல் நோயெதிர்ப்புச் சக்திக்கும் நடக்கும் போராட்டத்தில் நோயெதிர்ப்புச் சக்தி வென்றால் ஆள் தப்பிப் பிழைப்பார்.

அப்படியென்றால் வைரஸ் தாக்கியவர்கள் ஏன் வைத்தியசாலைக்குச் செல்லவேண்டும்?
சில வைரஸ்களுக்கு மருந்து உள்ளது. உதாரணத்திற்கு அம்மை வருத்தம், பாலுறுப்பிலே தொற்றும் ஹேர்ப்பிஸ் வைரஸ், பன்றிக்காய்ச்சல் வைரஸ் போன்ற பல வைரஸ்களுக்கு மருந்து உள்ளது.

மருந்து இல்லாத வைரஸ்களுக்கும் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி வேலை செய்வதற்கான சப்போர்டை மருத்துவம் வழங்கலாம். உதாரணத்திற்கு டெங்கு வைரஸ். டெங்கு வைரஸ் குறுதிச் சிறுதட்டுக்களை சிதைத்து குருதிப் போக்கை உருவாக்கும். அப்படிப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு குருதிச் சிறுதட்டுக்களைக் கொடுக்கலாம். டெங்கு நோயாளியில் உடலின் நீரின் அளவை சரியாக பலன்ஸ் செய்வது முக்கியம். மருத்துவமனைகளில் டெங்கு நோயாளியின் ஒவ்வொரு துளி சிறுநீரும் அளக்கப்பட்டு அதற்கேற்ப திரவம் பாய்ச்சப்படும்.
அண்மையில் நான் பார்த்த ஒரு நோயாளி சாதாரணமான தடிமன் வைரசால்தான் தாக்கப்பட்டார். ஆனால் நுரையீரலுக்குப் பரவி நுரையீரலின் செயற்பாடு பாதிக்கப்பட்டது. அவரை மூன்று கிழமைகள் முழுவதுமாக மயக்கி வைத்து குழாய் மூலம் ஒட்சிசன் வழங்கப்பட்டது. அவர் மீண்டும் மயக்க நிலையிலிருந்து எழும்பி சுயமாக சுவாசிக்க மூன்றுகிழமைகள் தேவைப்பட்டது.
ஏன் திடீர் திடீரென ஒரு வைரஸ் பல்கிப் பெருகுகிறது, கொரோனா வைரஸ் போன்றவை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
Mr.வைரஸ் பாகம் 2

வைரஸ் தாக்கம் வந்து திடீரென ஒரே நேரத்தில் பலர் பாதிக்கப்படுவது இப்போதுதான் நடைபெறுகின்றதென நிறையப் பேர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக இந்தப்பிரச்சினை இருக்கிறது. 1600 களில் மட்டக்களப்பு மஞ்சன்தொடுவாய், காத்தான்குடிப் பகுதிகளில் காத்தான் என்பவனைத் தலைவனாகக்கொண்ட ஒரு குழு வசித்தது.
அப்போது அவர்களிடையே அம்மை நோய் தாக்கி பலர் இறக்க அந்தக் குழு அந்த இடத்தைவிட்டு ஆரையம்பதி நோக்கி இடம் பெயர்ந்தார்களாம் என்றொரு வரலாறு உள்ளது.

ஆம் அந்தக்காலத்திலும் திடீர் திடீரென வைரஸ் பரவியதுண்டு. அப்போது சன நெருக்கடி குறைவு என்பதால் பரவும் வேகம் குறைவு. மேலும் பரவுவதைத் தடுக்க தொற்று ஏற்பட்ட இடத்தை விட்டுவிட்டு இன்னொரு இடத்திற்கு இடம்பெயரும் வசதியும் இருந்தது.
உலகத்தில் மனித இடப்பெயர்வுகள் மூலம் புதிய இடங்களை வாழ்விடங்களாக உருவாக்கியதில் இந்த வைரஸ்களுக்கும் பங்குள்ளது.
அடுத்து வைரஸ் என்று தெரியாத காலத்திலேயே நோய்த் தொற்று ஏற்பட்ட வரை பிரித்து வைத்தால் நோய் பரவுவதைத் தடுக்கலாமென்ற யுக்தியையும் மனித இனம் அறிந்திருந்தது.
அம்மை நோய் வந்தால் வீட்டு வாசலில் வேப்பிலை கட்டுவது, உள்ளே வராதீர்கள் உள்ளே அம்மை நோயாளி இருக்கிறார் என்று சொல்லும் அறிவிப்பே.
கடந்த நூற்றாண்டு small pox என்ற வைரஸ் உலகம் முழுவதும் பெருகி லட்சக்கணக்கானோர் இறந்தனர். அப்போது சனத்தொகை பல்கிப் பெருகியிருந்ததால் பண்டைய முறைகளான இடப்பெயர்வு, நோயாளிகளைக் தனிமைப்படுத்தல் போன்றவை சாத்தியமில்லாமல் போனது. உலகமே அழிந்து விடுமோ என்ற அச்சம் உருவானது.
இல்லை என்றது விஞ்ஞானம்.
அந்த நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.

தடுப்பூசி என்பது உடலின் நோயெதிர்ப்பை ஏமாற்றும் ஒரு யுக்தி. வீரியம் இல்லாத வைரஸ் உடலில் பாய்ச்சப்படும். அந்த வைரஸ்கள் நோயை ஏற்படுத்த முடியாதவை. ஆனால் எமது உடலின் நோயெதிர்ப்புச் சக்தி உண்மையான வைரஸ்தான் வந்துள்ளதென செயற்பட்டு அந்த நோயை எதிர்ப்பதற்கான அனைத்து யுக்தியையும் உருவாக்கும்.
அந்த யுக்திகள் காலத்துக்கும் உடலில் இருக்கும். அதன்பிறகு உண்மையாகவே அந்த வைரஸ் தொற்றும் போது ஏற்கனவே உருவான நோயெதிர்ப்பு யுக்திகள் உடனடியாக செயற்பட்டு அந்த வைரஸ் நோயை ஏற்படுத்த முன்னமே அழிக்கப்பட்டு விடும்.
இப்படித்தான் உலகத்தை அழிக்கும் என்று அச்சப்பட்டு small pox உலகத்திலிருந்து அழிக்கப்பட்டது.
அதன்பின் பாரிய இழப்புக்களை ஏற்படுத்திய போலியோ இலங்கை உட்பட்ட அநேகமான நாடுகளில் அழிக்கப்பட்டது.
ஒருகட்டத்தில் பாரிய குறைபாடுகள் உள்ள குழந்தைகள் பிறப்பது அதிகரித்தது. காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது, கர்ப்பகாலத்தில் ருபெல்லா வைரஸ் தாக்கி அது கருவிலிருக்கும் குழந்தைகளில் பாரிய குறைபாடுகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டது.
ருபெல்லா வைரஸ் தாக்கம் அம்மாவுக்கு சிறிய காய்ச்சல் போல வந்து போய்விடும்.
ஆனால் குழந்தை உயிர்வாழ முடியாதளவு சிக்கலை உருவாக்கும்.
இதைத்தடுத்தாக வேண்டும்.
உடனே கண்டுபிடிக்கப்பட்டது ருபெல்லா வக்சின். 90 களில் பாடசாலையில் பெண்களைத்தேடித்தேடி இந்தத் தடுப்பூசி கொடுக்கப்பட்டதை அறிந்திருப்பீர்கள். பெண்கள் கருத்தரிக்க முன்னமே தடுப்பூசி போடப்பட்டது. அந்த நோயின் பாதிப்புக்கள் குறைக்கப்பட்டது.

இப்போது அந்த தடுப்பூசி குழந்தைகளுக்குப் போடும் தடுப்பூசி யில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இப்போதும் தடுப்பூசி போடாமல் கருத்தரித்த ஒரு பெண்ணுக்கு கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் ருபெல்லா ஏற்பட்டால் கருக்கலைப்புச் செய்யும் வசதிகள் அநேகமான அபிவிருத்தி அடைந்த நாடுகளில் உள்ளன.
கவனிக்க அபிவிருத்தியடைந்து நாடுகளில் மட்டும்தான். நம்ம நாட்டில அதைப் பற்றிப் பேசினாலே ஆயர் தொடக்கம் பிக்கு வரை கொடிபிடித்து கருக்கலைப்பா என்று கொண்டு வருவார்களே!
ஹெப்பட்டைட்டீஸ் பீ என்றொரு வைரஸ் உள்ளது. எயிட்ஸ் போல உடலுறவு மூலமும், இரத்தங்கள் தொடர்பு படுவதன் மூலமும் பரவும். எயிட்சை விட ஆபத்தானதென்றும் சொல்லலாம்.
சத்திரசிகிச்சையின்போது தவறுதலாக வைத்தியரில் சிறிய காயம் ஏற்பட்டாலே வைத்தியரிலிருந்து நோயாளிக்கோ நோயாளியிலிருந்து வைத்தியருக்கோ தொற்று ஏற்படலாம். ஒரு அபிவிருத்தியடைந்து நாட்டில் ஒரு வைத்தியரை வைத்தியசாலைக்கு ள் அனுமதிக்கமுன்பே அந்த நோய் உள்ளதா என்று செக்பண்ணிவிட்டுத்தான் உள்ளே விடுவார்கள். நோயில்லை என்று உறுதிப்படுத்தியபின் நோயாளியிடமிருந்து வைத்தியருக்குத் தொற்றக்கூடாதென்பதற்காக அவருக்கு தடுப்பூசி இலவசமாக போட்டபின்பே வேலையை ஆரம்பிக்க விடுவார்கள்.
இலங்கையில்? அதையேன் கேட்பான்.

Mr.வைரஸ் பாகம் 3
திடீர் திடீரென சில வைரஸ்கள் பரவத்தொடங்குகிறதே ஏன்?
நான் முந்தைய பதிவில் சொன்னதுபோல வைரஸ்கள் நிறமூர்த்த அலகுகளைக் கொண்ட துணிக்கைகளாக வெளியில் கிடக்கும். இந்த நிறமூர்த்தங்களில் மியூட்டேசன் என்ற மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கும். மனித இனத்திலும் இந்த மியூட்டேசன் நடக்கும்
ஒரு குழந்தை கருத்தரிக்கும் போது அம்மா அப்பாவின் நிறமூர்த்தங்கள்(பரம்பரையலகுகள்) சேர்ந்து குழந்தைக்குரிய இயல்புகளைக் தீர்மானிக்கும் நிறமூர்த்த அலகுகள் உருவாகும். அதன்போது குழந்தையின் பரம்பரையலகுகளிலும் சில மியூட்டேசன் என்ற மாற்றம் நடைபெறும்.
இந்த மாற்றம் நல்லதாகும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம்.
கெட்ட மாற்றம் கருச்சிதைவை ஏற்படுத்தலாம் , அல்லது குழந்தைகளில் பிறப்புக் குறைபாடுகளை ஏற்படுத்தலாம். புத்திக்கூர்மை குறைவான பிள்ளைகளை உருவாக்கலாம். சில மியூட்டேசன் குழந்தையின் இயல்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம். சில மியூட்டேசன் புத்திக்கூர்மை கூடிய அல்லது அதீத திறமைகொண்ட குழந்தைகளை உருவாக்கலாம்.

இந்தக் காலத்துப் குழந்தைகளின் புத்திக்கூர்மை 50 வருடத்திற்கு முந்திய குழந்தைகளை விட அதிகமாக இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். நல்ல மியூட்டேசன் அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட கெட்ட மியூட்டேசன் அழித்துவிடலாம்.
சரி வைரசுக்கு எது நல்ல மாற்றம்?
ஒரு வைரசின் மாற்றம் அதன் இயல்புகளை மாற்றாது விட்டால் அதன் பாட்டுக்குக் கிடக்கும். கெட்ட மாற்றமென்றால் அழிந்துபோகும். நல்லமாற்றமென்றால் நமக்குத்தான் ஆபத்து.
ஆம், வைரசின் அமைப்பில் ஒரு நல்ல மாற்றம் வந்தால் அது வீரியமாகிவிடும்.
கொரோனா வைரஸ் அப்படி வீரியமாகியிருக்கிறது. நமக்கு ஆப்பாகியிருக்கிறது.

நான் மருத்துவபீட மாணவனாக இருக்கும்போது கொரோனா வைரஸ் வகை உள்ளது, அது மனிதனில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்று படித்ததோடு சரி.
அதற்குமேல் டீட்டைலாக படித்தில்லை. அப்போது ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்கள் பற்றி மட்டும்தான் டீடைலாக படித்தோம்.

அதன்பின் பட்டமேற்படிப்பின்போது சிக்கா வைரஸ் , H1N1 போன்ற புதுவித வைரஸ்களை யும் டீடைலாக படிக்கவேண்டிய வந்தது. அப்போதும் கொரனா வைரஸ் பற்றி அலட்டிக் கொண்டதில்லை. இப்போதுதான் தேடிப்படித்துக்கொண்டிருக்கிறேன்.
H1N1 சிக்கா போன்றவை நோயெதிர்ப்புச் சக்தி குறைந்த வயதானவர்கள் கர்ப்பிணிகள் போன்றவர்களையே அதிகம் பாதித்தது. ஆனால் கொரோனா வைரஸ் நோயெதிர்ப்பு நன்றாக உள்ள இளவயதானவர்களையும் கொல்லுமளவுக்கு வீரியமானதாய் உருவெடுத்திருப்பதுதான் பயங்கரமாக உள்ளது.
இது சீனாவில் பரவத் தொடங்கியிருப்பதும் ஆபத்தான விடயம். சீனா மிகவும் சன அடர்த்தி கூடிய நாடு. அதனால் மிக இலகுவாக பரவிவிடும்.
செய்திகளில் சொல்லப்படுவது போல இது வெறும் 50 பேரை மட்டும் காவு வாங்கியிராது. இது இப்போது ஏற்பட்ட தொற்று மில்லை.
சில மாதங்களுக்கு முன்பே இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கும். பலர் இறந்திருப்பார்கள். அப்போது இனங்காணப்படாத தொற்றினால் இறந்தவர்களாக அவர்கள் வகைப்படுத்தப்பட்டிருப்பார்கள். காரணம் யாரும் இந்த வைரசைச் செக் பண்ணியிருக்கப்போவதில்லை.

அப்படி நூற்றுக்கணக்கானோர் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக இறந்திருக்கலாம். அதேபோல் ஆயிரக்கணக்கானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு தானாகவே சுகமாகி இருக்கலாம்.
அந்த ஆயிரக் கணக்கோரிலிருந்து பல்லாயிரக்கணக்கானோருக்கு இந்த நோய் தொற்றியிருக்கலாம்.
இனங்காணாத தொற்றினால் அதிகமானோர் பாதிக்கப்படுகிறார்கள் என்றபின்பே புதுவித நோய்க் காரணிக்கான ஆய்வு செய்யப்பட்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.
ஆக இப்போதே நிறையப்பேரிடம் இந்த வைரஸ் பரவியிருக்கும். ஒரு சன அடர்த்தி கூடிய நாட்டில் இதை எப்படி அந்த நாடு கட்டுப்படுத்தப்போகிறது, என்பதே இப்போது பெரிய கேள்வி.

உலக நாடுகள் எல்லாம் அலர்ட் ஆகிவிட்டன. நம் நாட்டின் நிலை என்ன?
Mr. வைரஸ் இறுதிப் பாகம்
…………………………………………….

சீனாவில் ஏற்பட்டிருக்கும் இந்த வைரஸ் இலங்கையிலும் பரவலாமா?
நிச்சயமாக இலங்கை ஆபத்திலேயே உள்ளது.
இது பரவுகின்ற வேகத்தைப் பார்த்தால் நாம் முதல் நோயாளியைக் கண்டுபிடிக்கும் வரை காத்திருக்கமுடியாது.

கண்டு பிடிக்கப்படும் முதல் நோயாளி உண்மையான முதல் நோயாளியாகத்தான் இருப்பாரென்றும் சொல்லமுடியாது.
நோய் தீவிரமாகும் போதுதான் ஒருவர் வைத்தியசாலைக்கு வருவார். அப்படியொருவர் வருவதற்கு முன்பே பலருக்கு இந்த நோய் ஏற்பட்டு மறையலாம். அவர்களிடமிருந்து இன்னும் பலருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம்.
ஆக முதல் நோயாளி அடையாளம் காணப்பட முதலே பலர் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகி விடலாம்.

கொழும்பு போன்ற இடங்களில் பரவத் தொடங்கினால் அதோ கதிதான்.
எந்தவித கட்டுமான வரையறையுமில்லாமல் நெருக்க நெருக்கமா கட்டப்பட்டிருக்கும் குடியிருப்பாளர்களிடையே கொரோனா வைரஸ் கும்மியடி க்கும்.

எமது வைத்தியசாலை வசதிகளும் இதை எதிர்கொள்ளுப் போதுமானவை இல்லை.
இந்த நோயாளிகளை தனிமைப்படுத்தவேண்டும். அநேகமாக அனைத்து வைத்தியசாலைகளிலும் தனிமைப்படுத்தும் வசதிகள் இல்லை.
ஒரு விடுதியை இதற்காக ஒதுக்குவதென்றாலும் அநேகமானவை திறந்தவெளி அரங்குகள்தான்.
இந்த நோய்க்கான சோதனைகளும் கொழும்பிலே ஒரு இடத்தில்தான் இப்போதைக்கு உள்ளது என நினைக்கிறேன்.
இந்த நோயாளிகளைக் கவனிக்க அதிதீவிரப்பதிவு தேவைப்படும்போது ஒரு மாவட்டத்திற்கே பத்துக் கட்டிலுக்கும் குறைவான வசதிகளே அநேக இடங்களில் இருக்கிறது.
அப்படியென்றால் என்னதான் செய்யலாம்?
இது பரவாமல் தடுப்பதுதான் இலகுவான வழி.
எப்படித்தடுக்கலாம்?
வெரி சிம்பிள்.
இலங்கைக் குடிவரவுத் திணைக்களத்திடம் கடந்த மூன்று மாத காலத்தில் சீனாவிலிருந்து வந்தவர்களின் பெயர்களைப் பெறவேண்டும்.
கடந்த 3 மாதத்தில் சீனாவிலிருந்து வந்த அனைவரும் பக்கத்திருக்கும் வைத்தியசாலையில் பதிவு செய்யவேண்டுமென்று பொது அறிவிப்புக் கொடுக்கவேண்டும்.
அவசர நிலையை அறிவித்து அப்படிச் சமூகமளிக்காதவர்களுக்கு தண்டனை என்ற சட்டத்தை உருவாக்கவேண்டும்.

குடிவரவுத் திணைக்களத்தில் பெற்றுக்கொண்ட தரவுகளின் அடிப்படையில் சமூகமளிக்காதவர்களைத் தேடிப்பிடிக்கவேண்டும்.
இதற்கு இராணுவம் பொலிஸ் PHI போன்றோரைப் பயன்படுத்தலாம்
அவ்வாறு சீனா சென்று வந்தோரையும் இனி வரப்போகின்றோரையும் மூன்று நாட்களுக்கொருதடவை ஒரு மாதத்திற்கு வைத்தியரை சந்திக்கவேண்டுமென்று ஆணையிடவேண்டும்.

அதற்கு அவர்களுக்கு அந்த நாளுக்கு சம்பளத்தோடு விடுப்பும் போக்குவரத்துச் செலவும் கொடுத்தால் இன்னும் சிறப்பு.
அவர்களில் சிறிய அறிகுறி தென்பட்டாலும் உடனடியாக தனிமைப்படுத்தி சோதனை செய்யவேண்டும்.