தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் தமிழர்களின் பிரதிநிதிகளே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, January 1, 2020

தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் தமிழர்களின் பிரதிநிதிகளே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் தமிழர்களின் பிரதிநிதிகளே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் இந்திய அரசாங்கமோ, இலங்கை அரசாங்கமோ அல்ல. தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களே அந்த பிரச்சனைகளுக்கு காரணம். அவர்கள் பிரச்சனையை சரியாக அணுகவில்லை.

இவ்வாறு மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன், வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரதிநிதியொருவர் மீது ஈ.பி.டிபியினர் தாக்குதல் நடத்திய செய்தியையும் மறுத்துள்ளார்.

வவுனியா வாடி வீட்டில் நேற்று (31) இடம்பெற்ற கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் போனோரின் உறவுகளை பல மாவட்டங்களிலும் சந்தித்திருக்கின்றேன். காணாமல் போனோரின் உறவுகள் தங்களுடைய பிரச்சனைகளை பலரிடம் தெரிவித்தும் இதுவரை தீர்க்கப்படவில்லை என தெரிவித்திருந்தனர். குறிப்பாக தங்களுடைய உறவுகளிற்கு என்ன நடந்தது, அவர்களை இழந்தமையால் மன வேதனையிலும், பொருளதார அலைச்சலிலும் தாங்கள் இருப்பதனால் அவர்கள் தங்களிற்குரிய உரிய பதிலை பெற்றுத்தருமாறு கேட்டிருந்ததோடு தங்களின் சார்பாக என்னை அரசாங்காத்துடன் கதைக்குமாறு தெரிவித்திருந்தனர். இப்பிரச்சனை தொடர்பாக அமைச்சரவையில் பேசுவதற்குள்ளேன்.

இதேவேளை சிலர் காணாமல் போனோர் சங்கங்களை அமைத்து அதன் ஊடாக தங்களுடைய வாழ்வாதாரத்தை சிறப்பாக்கி கொள்வதோடு வெளிநாடுகளிலும் உள்நாடுகளிலும் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக தங்களை தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். முதல் முதல் எங்களால் 1998ம் ஆண்டு காணாமல் போனோரை தேடிக்கண்டுபிடிக்கும் சங்கத்தை அமைத்து அதன் ஊடாக அம்மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு காண்பதற்கு முயற்சி எடுத்தோம். ஆனால் தவறானவர்கள் பிரச்சனைகளை தீரா பிரச்சனையாக வைத்திருப்பதற்காக அவர்களை தவறாக பயன்படுத்தி வருகின்றார்கள். அம்மக்களிற்கான விரைவாக தீர்வை பெற்றுக்கொடுப்பேன்.வவுனியா மாவட்டத்தை சேர்ந்த காணாமல் போனவர்கள் என்னை சந்திக்க மறுத்தது தொடர்பாக எனக்கு தெரியாது. எனக்கு உடனடியாக அவசரமாக கொழும்பு செல்ல இருப்பதால் இச்சந்திப்பை ஒத்திப் போட்டுள்ளேன் என்றார்.

செய்தியாளர்: வவுனியா காணாமல் போன சங்கத்தின் செயலாளர் மீதான தாக்குதலினை தங்களின் கட்சி ஆதரவாளர்கள் நிகழ்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு கட்சி ஆதரவாளர்களினால் நிகழ்த்தப்பட்டால் அதற்கான நடவடிக்கை எடுப்பீர்களா?

டக்ளஸ் தேவானந்தா: இச்சம்பவம் செய்திதானே ஒழிய சரியான உறுதிப்பாடு இல்லை. கட்சி ஆதரவாளர்கள் ஈடுபட்டிருந்தால் அதற்கான நடவடிக்கை எடுப்பேன். ஏன்றாலும் இச்சம்பவம் தொடர்பாக அறிந்த வரை, கட்சி ஆதரவாளர்கள் அவர்களிடம் சென்று நான் அழைப்பு விடுத்துள்ளது பற்றி தெரிவித்துள்ளனர். அத்துடன் இப்பிரச்சனை பற்றி என்னிடம் கதைத்து தீர்வு காண கூடாதா என்று கூறியதோடு இப்பிரச்சனைகளை தீராத பிரச்சனையாக வைத்திருக்காமல் இதற்கான உண்மையான தீர்வினை பெற விரும்பினால் எனது அழைப்பை ஏற்று வரலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.அதற்கு காணாமல் போனோர் சங்க செயலாளர் கட்சி ஆதரவாளர்களை தள்ளியதாக கேள்வி. என்றாலும் இச்சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபடியால் இது தொடர்பாக மேலதிகமாக சொல்ல விரும்பவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் போட்டிபோடுவது அவர்களது அரசியில் கொள்கை. அதாவது வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு கடந்த காலங்களை போல் வெற்றி பெறுவார்களா என்ற கேள்வி இருக்கின்றது. மேலும் கூட்டமைப்பு காலத்திற்கு காலம் இவ்வாறு சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

மனோ கணேசனிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலே ஒப்பந்தம் உள்ளது பற்றி எனக்கு தெரியாது அத்துடன் அதைபற்றி அக்கறையும் இல்லை. சில தமிழ் தரப்புக்கள் மக்களுடைய பிரச்சனைகளை தீராப்பிரச்சனையாக வைத்திருந்து அதற்கு தீர்வை பெற்றுத்தருவோம் என்று மக்களிற்கு பலவிதமான வாக்குறுதிகளையும் பொய்யான உறுதி மொழிகளையும் கொடுத்ததுதான் வரலாறு. மேலும் இவர்கள் சாதியின் பெயரால் கதைப்பதும், ஐக்கியத்தின் பெயரால் கதைப்பது, ஏகபிரதிநிதித்துவத்தின் பெயரால் கதைப்பது, சர்வதேச சமூகத்தின் பெயரால் கதைப்பார்கள். கடந்த முப்பது முப்பத்தைந்து வருடங்களாக இவற்றின் ஊடாகவே வாக்குகளை அபகரித்தார்கள். திரும்பவும் இவற்றைதான் சொல்ல முற்படுவார்கள். மேலும் முப்பது முப்பத்தைந்து வருடங்களாக இவர்களால் ஏன் மக்களின் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ அல்ல. தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களே அந்த பிரச்சனைகளுக்கு காரணமே ஒழிய வேறு எவரும் இல்லை. மக்கள் எங்களுடன் அணிதிரண்டால் விரைவாக நியாயமான தீர்வை பெற்றுக்கொடுப்போம்.இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பின்னர் 1990ம் ஆண்டு மாற்று கருத்து, மாற்று வேலைத்திட்டத்துடனே ஈபிடிபி களமிறங்கியது. வன்முறைக்கு ஊடாக தீர்வு காண முடியாது. பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை தீர்க்கலாம் என்று தெரிவித்து இருந்தோம். அன்று இருந்த தமிழ் தரப்பு கூறியது, வன்முறைக்கு ஊடாகவே தீர்வு காணமுடியும் என்று கூறியது. அதாவது பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக சென்றால் அவர்களை துரோகிகளாக கருதப்பட்டு கொல்லப்படுவார்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். ஆனால் இன்று வன்முறையா ஜனநாயக அணுகுமுறையா வெற்றி பெற்றிருக்கிறது. ஏன் வன்முறையால்தான் வெற்றி பெற முடியும் என்று சொன்னவர்கள் கூட ஒரு நேரத்தில் ஏக பிரதிநிதித்துவம் என்ற பேரில் மக்களை உசுப்பேத்தி வாக்குகளை அபகரித்தனர்.

ஒரு பக்கம் தங்களிடம் ஆயுத பலம் இருக்கிறது என்றார்கள். இன்னொரு பக்கம் பாராளுமன்றத்தில் ஏக பிரதிநிதித்துவம் இருக்கிறது என்றார்கள். ஏன் அவர்களினால் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. பிரச்சனை தீர்க்க முடியாதத்திற்கு காரணம் அவர்களே ஒழிய இந்திய அரசாங்கமோ, இலங்கை அரசாங்கமோ அல்ல. தமிழ் தலைமை என்று சொல்லப்பட்டவர்கள் சரியாக பிரச்சனைகளை அணுகவில்லை என்பது என்னுடைய அனுபவம்.

எனக்கு 15 வருடத்திற்கு மேல் ஆயத போராட்டத்தினுடைய முன் அனுபவம், இருபத்தைந்து முப்பது வருடத்திற்கு மேல் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்ட அனுபவம் இருக்கின்றது. இந்த அனுபவங்களிற்கு ஊடாகவே எனது கொள்கைகளும், வேலைத்திட்டங்களும் அமைந்திருக்கின்றது. அந்த வகையில் வர இருக்கின்ற சந்தர்ப்பத்தை மக்கள் சரியாக பயன்படுத்தி கொண்டால் விரைவாக தீர்வை காண முடியும் என தெரிவித்தார்.