திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 தமிழ் மாணவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று இடம்பெற்றது.
மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடமான, காந்தி சிலைக்கு அருகில் இந்த நினைவஞ்சலி இடம்பெற்றது. தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவஞ்சலி இடம்பெற்றது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவாஜிலிங்கம்,
“மாணவர்கள் கொல்லப்பட்டதும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட 5 எம்.பிக்கள் நாங்கள் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேசினோம். இது அரசபடைகளால்தான் நடந்தது, அதை நிரூபிக்க எம்மிடம் ஆதாரமுள்ளது என நான் சொன்னேன். அப்போது இடைமறித்த மஹிந்த ராஜபக்ச, விசேட அதிரடிப்படையினர்தான் இதைச் செய்தார்கள் என்பது எனக்கு தெரியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். ஆனால் அவர் சொல்லி இன்று 14 ஆண்டுகள் கழித்து அவரது சகோதரர் ஜனாதிபதியாக இருக்கிறார். சொன்ன மஹிந்த பிரதமராக இருக்கிறார். ஆனால் அந்த மக்களிற்கு நீதி கிடைக்கவில்லை.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை தூக்கி குப்பையில் வீசுவோம் என இந்த அரசு சொல்கிறது. சர்வதேச உடன்படிக்கையை கொச்சைப்படுத்தியுள்ளனர். இந்த மாணவர்களின் படுகொலை உள்ளிட்ட இனப்படுகொலை, மற்றும் தமிழ் மக்களிற்கான நீதி கோரி இம்முறையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு செல்வோம்“ என்றார்.