19 ஆவது திருத்தச்சட்டத்தை எந்த நோக்கத்திற்காக அரசாங்கம் இல்லாது செய்ய முற்படுகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் 18 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முழுமையான அதிகாரம் கொண்ட ஒருவராகத்தான் இருந்தார்.
இதன் ஊடாக, அவர் நீதிமன்றங்களுக்குக் கூட அழுத்தம் பிரயோகிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். இதனை இல்லாது செய்யும் நோக்கில்தான் நாம் 19 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தோம்.
அதில், ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன, சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டமூலம் தொடர்பாக ஒரு நாள் முழுவதும் நாடாளுமன்றில் விவாதம் நடைபெற்றது. அனைவரின் ஒப்புதலுடன்தான் இது நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில், தற்போது இதனை ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. அதேநேரம், தங்களின் வேலைத் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என அரசாங்கம் தற்போதுக் கூறிக்கொண்டிக்கிறது.
அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்கவும், ஏனைய பிரச்சினைகளைத் தீர்க்கவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை.
எமது 100 நாள் அரசாங்கத்தின்போது நாம் பாரிய வேலைத்திட்டங்களை செய்திருந்தும், இந்த அரசாங்கம் இன்று தடுமாற்றத்துடன்தான் ஆட்சி செய்து வருகிறது” என்றார்.