இலங்கை தமிழ் அரசுக்கட்சி அடிக்கடி கொள்கைகளை மாற்றிக் கொண்டு வந்த கட்சி. அதனால், கோட்டாபய அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லையென, கட்சியின் பிரதானிகளிற்கு எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்ததாக தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.
கடந்த வாரத்திற்கு முதல்வாரம், திருகோணமலையில் நடந்த கட்சியின் பொதுச்சபை கூட்டத்தில் இதனை எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒன்றிற்கும் மேற்பட்டவர்களின் மூலம் தமிழ்பக்கம் அதை உறுதி செய்தது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச்சபையில் 9 பேர் அங்கம் வகிக்கிறார்கள். இதில் 7 பேர் அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதன்போது, கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம், அரசுடன் இணைந்து அமைச்சு பதவியேற்க வேண்டுமென, விடயத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். கிழக்கிலுள்ள தமிழ் அரசுக்கட்சியின் பெரும்பான்மையினர் அதை விரும்புவதாகவும், ஆகவே அமைச்சு பதவியேற்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
இதன்போது, குறுக்கிட்ட வடக்கு அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், அந்த கதையை நிறுத்தும்படி சொன்னார். அமைச்சு பதவியேற்பதற்கான சூழல் இதுவல்ல, மக்கள் அதற்கான ஆணையை எமக்கு தரவில்லை, அது துரோகமான செயற்பாடு என சுட்டிக்காட்டி புரிய வைத்தார்.
எனினும், அமைச்சு பதவியேற்பதை நியாயப்படுத்தினார் எம்.ஏ.சுமந்திரன். அமைச்சு பதவியேற்பதில்லையென முன்னர் கட்சி முடிவெடுத்திருந்தாலும், இப்பொழுது அமைச்சு பதவியேற்கலாம். தமிழ் அரசு கட்சி காலத்திற்கு காலம் கொள்கைகளை மாற்றி வந்தது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை தேர்தலையும், கிழக்கு மாகாணசபை தேர்தலையும் புறக்கணித்தது. பின்னர் கிழக்கு, வடக்கு மாகாணசபை தேர்தல்களில் போட்டியிட்டது, அது போல இந்த விடயத்திலும் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.
அத்துடன், அமைச்சு பதவியை ஏற்பது இயலாமையின் வெளிப்பாடு என சிறிதரன் எம்.பி குறிப்பிட்டிருந்தது பற்றியும், ஆட்சேபணை தெரிவித்தார்.
இந்த விவாதங்களையெல்லாம் இரா.சம்பந்தன் மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தார். எதுவும் பேசவில்லை. இறுதியா, “அனைத்திற்கும் முன்னதாக, புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் பணியை செய்யுங்கள். இந்த இடைக்கால அரசில்கூட அதை நிறைவேற்றலாம். ஐ.தே.க இதை எதிர்க்காது. நிதி, நிர்வாக, பொலிஸ் அதிகாரங்களுடன்- மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் மாகாணசபைக்குட்பட்டதாக தீர்வு திட்டத்திற்கு மஹிந்த சம்மதித்திருந்தார். புதிய அரசியலமைப்பு அதனடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டிருந்தது. ஆகவே இரண்டு தரப்பையும் சம்மதிக்க வைத்து, இடைக்கால அரசிலேயே அரசியலமைப்பு மாற்றத்தை நிறைவேற்றலாம். அதை செய்யுங்கள்“ என்றார்.
அமைச்சு பதவிகள் குறித்த கருத்துக்களை கண்டுகொண்டதாகவே அவர் காட்டிக் கொள்ளவில்லை.