யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் நடைபெறும் அளவிற்கு அதிகமான மணல் கடத்தல் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முறையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவசர கடிதமொன்றை ஜனாதிபதிக்கு, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் நேற்று (வியாழக்கிழமை) அனுப்பி வைத்துள்ளார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் மருதங்கேணி, பளை, கரைச்சி பிரதேச செயலக பிரிவுகளில் நடைபெறும் சட்டவிரோத மணல் அகழ்வு, விற்பனை தொடர்பாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பளை பிரதேச செயலாளர் பிரிவில் கிளாலி, அல்லிப்பளை, புலோப்பளை, இயக்கச்சி, மந்துவில், சுண்டிக்குளம் பகுதிகளில் தனியார் காணிகளில் அடாத்தாக மண் அகழ்வதையும் சித்தார்த்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டவிரோத மணல் அகழ்வால் ஏற்படும் பாதிப்புக்களைச் சுட்டிக்காட்டி, இந்த விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.