பிரித்தானிய தூதரகத்தால் குற்றவாளியென அறிவிக்கப்பட்டு, பிரியங்க பெர்னாண்டோவிற்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை தானே செலுத்துவதாக அறிவித்துள்ளார் பிரித்தானியாவில் வாழும் சிங்கள தொழிலதிபர் ஒருவர்.
இலங்கை தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களை நோக்கி கழுத்தை வெட்டுவதை போல சமிக்ஞை காண்பித்ததாக பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தில் பயிணாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 2018ம் ஆண்டு இலங்கை சுதந்திரதின நிகழ்வின்போது இந்த சம்பவம் நடந்தது.
இது தொடர்பான வழக்கு நடைபெற்ற நிலையில், இராஜதந்திர சிறப்புரிமை அவருக்கிருப்பதாக தெரிவித்து வழக்கு விசாரணை கைவிடப்படவிருந்தது. எனினும், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம், பிரியங்க பெர்னாண்டோவிற்கு சிறப்புரிமை இல்லையென குறிப்பிட்டு, வழக்கை நடத்தியது.
அதன் தீர்ப்பில், அவரை குற்றவாளியாக அறிவித்து, 2400 ஸ்ரேலிங் பவுண் அபராதம் விதித்தது. அத்துடன் வழக்கு செலவு, நட்டஈடு உள்ளிட்ட இதர கட்டணங்களும் சேர்ந்து 4419.80 ஸ்ரேலிங் பவுண் அவர் செலுத்த வேண்டியிருந்தது.
இந்நிலையில், பிரித்தானியாவிலுள்ள சிங்கள தொழிலதிபராக ரஞ்சன் பஸ்நாயக்க என்பவர், அந்த நட்டஈட்டை தானே செலுத்துவதாக அறிவித்துள்ளார்.