கோத்தாவை கொல்ல சதியாம்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, December 4, 2019

கோத்தாவை கொல்ல சதியாம்?இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச்வை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக மீண்டும் தமிழர்கள் கைதாகியுள்ளனர்.வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த முகமது றிப்கான், கிளிநொச்சி அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் மதன், விசுவமடு தர்மபுரத்தைச் சேர்ந்த வேலு கோணேஸ்வரம், விசுவமடு கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த குணரத்னம் நகுலேஸ்வரன் மற்றும் மஸ்கெலியாவைச் சேர்ந்த ஆரியராஜன் கமலராஜா ஆகிய ஐந்து பேரும் ஜனாதிபதியை கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஓட்டமாவடியை சேர்ந்த முகமது றிப்கான் என்பவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள மினுவாங்கொடை நீதிமன்ற நீதிவான் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த சந்தேக நபருடன் கைது செய்யப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த ஏனைய நான்கு தமிழ் இளைஞர்களும் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வத்தளை பிரதேசத்தில், சிவில் பாதுகாப்புப் படையினர் அணியும் பெருந்தொகையாக சீருடைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளையில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடைக்கு அருகில் நேற்றிரவு நீர்கொழும்பு திசையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சந்தேகத்துக்கிடமான லொறியொன்றை கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர்.

அதன்போது, குறித்த லொறியிலிருந்து சிவில் பாதுகாப்பு படையினர் அணியும் பெருந்தொகையான சீருடைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.வாகன சாரதியான  பூண்டுலோயா பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான நபர் ஒருவர் கைதாகியுள்ளார்