செங்கலடி களுவன்கேணி கிராமத்தின் அரைவாசிக்கு மேற்பட்ட பகுதிகள் தனியார் காணிகள் என்ற போர்வையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அரச காணிகளில் அதுவும் அரை ஏக்கர், ஒரு ஏக்கர் காணிகளில் குடியிருக்கும் சாதாரண பொதுமக்கள் மீது அதிகாரத்தை பயன்படுத்தி பொலீசாரை கொண்டு வெளியேற்றும் பிரதேச செயலாளர்கள் இதுபோன்ற காணி அபகரிப்புகளை கண்டும் காணாது விடுவது ஏன்?
மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் காணிகள் என்ற போர்வையில் பல நூறு ஏக்கர் அரச காணிகள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு இரகசியமாக விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கு உயர் பதவியில் உள்ள அரச அதிகாரிகள் சிலர் துணை போயுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள களுவன்கேணி கடற்கரையை அண்டிய முற்றும் முழுதாக தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள சுமார் 317 ஏக்கர் காணியை முஸ்லீம்களின் காணி என்று கூறி 'சங்கரிலா ஹாட்டலுக்கு' 40 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாகவும் அதற்குள் சுமார் 27 ஏக்கருக்கு மேற்பட்ட அரச காணிகள் உள்ளதாக ஆதாரபூர்வமான ஆவணங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளது.
காலம் காலமாக தமிழர்களின் பூர்வீக காணிகளாக இருந்த களுவன்கேணி மீனவக் கிராமத்தின் அரைவாசி பகுதியை தனியார் காணிகள் என்று கூறி அதுவும் காத்தான்குடியில் இருக்கும் முஸ்லீம்களின் காணிகள் என்று கூறி தற்போது வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு காணி மாபியாக்கள் ஊடாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் ஹாட்டல் ஒன்றிற்காக அடைக்கப்படும் மிகப்பெரிய நிலப்பரை கொண்ட பகுதியாக களுவன்கேணி கடற்கரைப் பகுதியில் அடைக்கப்படும் 317 ஏக்கர் காணி அமைந்துள்ளது.
சர்வதேச வெளிநாட்டு முகவர்களின் இலக்காக தற்போது மட்டக்களப்பின் கடற்கரைப் பகுதிகள் மாறியுள்ளது.
ஏப்ரல் 21 குண்டு தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்ட சீனாவின் சங்கரில்லா ஹோட்டலுக்காக வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குறித்த நிலப்பரப்பை
இலங்கையில் நிலம் வாங்குவதற்கான தரகு வேலையை செய்து வருவதாக கூறப்படும் இந்தியாவை தலமையகமாக கொண்ட கொழும்பில் உள்ள நிறுவனம் ஒன்று வாங்கி சங்கரில்லா ஹோட்டலுக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழிழ விடுதலைப் புலிகளின் காலத்தில் முக்கிய கடற்கரைப் பகுதியாக கருதப்பட்ட களுவன்கேணி கடற்கரையை விடுதலைப் புலிகளின் கடல் பயணத்தில் முக்கிய கேந்திர நிலையமாக இருந்துள்ளது.
கிழக்கிற்கான பல கடல் பயணங்களை விடுதலைப் புலிகள் களுவன்கேணி கடற்கரை ஊடாகவே அந்த காலப்பகுதியில் மேற்கொண்டனர்.
இன்நிலையில் குறித்த பிரதேசத்தை பெருந்தொகை பணம் கொடுத்து வாங்குவதற்கு பிராந்திய நாடுகளின் தனியார் நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகின்றனர்.
சீன நிறுவனம் ஒன்று இந்திய நிறுவனத்தின் ஊடாக குறித்த பகுதியில் உள்ள 317 ஏக்கர் காணியை விடுதி அமைப்பதாக கூறி சுமார் 40 கோடி ரூபாய் பணத்திற்கு வாங்கியுள்ளமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதைவிட குறித்த காணிகள் அனைத்தும் முஸ்லீம்களின் காணிகள் என ஆவணங்கள் ஊடாக அடையாளப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சுவிகரிக்கப்பட்ட அரச காணிகள்!
இதைவிட தனியார் காணிகள் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் சுமார் 27 ஏக்கர் அரச காணிகள் உள்ளதாகவும் அதனை அரச அதிகாரிகளின் போலியான ஆவணங்களை வைத்து மறைத்தே குறித்த காணியை விற்பனை செய்துள்ளதாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.
அரச அதிகாரிகளும் தனியார் நிறுவனங்களும் இணைந்தே மேற்படி மோசடி வேலைகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சுவிகரிக்கப்பட்ட அரச காணிக்குள் நீர் வடிந்தோடும் தோனாக்கள், ஐஸ் பெக்டரிக்காக ஒதுக்கப்பட்ட நிலம், இராணுவ முகாம் இருந்த நிலம் என பல பகுதிகள் உள்ளடக்குகிறது.இவை அனைத்தையும் மறைத்து தனியார் காணிகள் எனக் கூறி விற்பனை செய்துள்ளனர்.
இலங்கையின் வடகிழக்கு கடல் பிராந்தியத்தில் இந்திய சீன அமெரிக்க நாடுகளின் ஆதிக்கப் போட்டி நிலவி வரும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள களுவன்கேணி கடற்கரை பகுதியில் சீன நிறுவனம் ஒன்று இரகசியமாக கால் ஊண்டுகிறதா? என்ற சந்தேகமும் எழுகிறது.
கடந்த அரசாங்கத்தின் ஊடாக கிழக்கில் சீனித் தொழிட்சாலைக்காக சீன நிறுவனத்திற்கு மகாவலி அபிவிருத்தித் திணைக்களம் ஊடாக பல நூறு ஏக்கர் காணிகளை வழங்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட நிலையில் தற்போது பல நூறு ஏக்கர் தனியார் காணிகளை சுற்றுலா துறை என்ற போர்வையில் பெருந்தொகை நிதி கொடுத்து வாங்குவதற்கான காரணம் என்ன? ஏற்கனவே மட்டக்களப்பு பாசிக்குடா பகுதி சுற்றுலா துறை மையமாக திகழும் நிலையில் காடுகளும் சவுக்கு மரங்களும் நிறைந்த களுவன்கேணி கடற்கரை பகுதிகளின் இயற்கை வளத்தையும் மீன் பிடி தொழிலையும் இல்லாதொழிக்கும் வகையில் உருவாகப்போகும் கட்டிடம் என்ன? என்ற கேள்வி எழுகிறது.
அழிக்கப்பட்ட சவுக்கு மரங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்?
தனியார் காணிகள் என அடையாளப்படுத்தப்பட்ட மேற்படி 317 ஏக்கர் காணியிலும் பெறுமதி வாய்ந்த பல நூறு சவுக்கு மரங்கள் இருந்துள்ளது. இவை அனைத்தும் தற்போது அழிக்கப்பட்டு விட்டன. இவற்றை வெட்டுவதற்கு அனுமதி கொடுத்தது யார்? என்ற கேள்வி எழுகிறது.
குறித்த காணிகள் தற்போது கொங்கிரீட் தூண்கள் போடப்பட்டு மிகவும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டு வருகிறது.
இவை அடைக்கப்பட்டதன் பின்னர் அந்த 317 ஏக்கர் காணியும் சீன நிறுவனமான சங்கரில்லா ஹோட்டலின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வரும் என கூறப்படுகிறது.
மட்டக்களப்பில் எதிர்காலத்தில் பாசிக்குடாவுக்கு அடுத்தபடியாக வெளிநாட்டு நிறுவனங்களினால் போட்டி போட்டுக்கொண்டு ஆக்கிரமிக்கப்படப்போகும் கிராமமாக களுவன்கேணி மீனவ கிராமம் உள்ளது.
பிராந்திய நாடுகளின் ஆதிக்கப் போட்டியின் மற்றுமொரு பொருளாதார ஆக்கிரமிப்பு வலயமாக எதிர்காலத்தில் களுவன்கேணி கடற்கரை பிரதேசம் மாற்றமடையபோகிறதா என்ற அச்சம் மீனவ மக்களிடையே ஏற்படத் தொடங்கியுள்ளது.
இது குறித்து அண்மையில் நடந்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால் அதற்கான உரிய பதிலை செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் அவர்கள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது