சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனரென முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு- திக்கோடை பிரதேசத்தில் இடம்பெற்ற, ஜனாதிபதி தேர்தலின் வெற்றி, தோல்வி குறித்து ஆய்வு செய்யும் மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதி கோட்டபாய ராஜபஷ வெற்றியடைவார் எனவே வெல்லும் அணியுடன் நாங்கள் பயணிப்போம் அதில் பயணிக்கின்ற போதுதான் நாங்கள் வாதிட்டு எமது உரிமை கேட்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ஆகவே வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டோம் ஆனால் மக்கள் தெளிவடையவில்லை.
இன்று சஜித் பிரேமதாசவை கொண்டு வந்திருந்தால் என்ன நடந்திருக்கும். கிழக்கில் தமிழன் இருந்திருக்க முடியாதுடன் பாரிய பின்னடைவுகளை சந்தித்திருக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் இன்று சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
சிங்கள மக்களின் அதிக வாக்குகளால் ஒரு ஜனாதிபதி உருவாகியுள்ளார் இதனை நிரூபித்து காட்டிய ஜனாதிபதி தேர்தல் இதுதான்.
கடந்த காலத்தில் 6 ஜனாதிபதி தேர்தல் நடந்திருக்கின்றது அந்த ஜனாதிபதியை சிறுபான்மை மக்களின் வாக்குகள் நிர்ணயித்தது. ஆனால் இன்றைக்கு பெரும்பான்மை மக்கள் மட்டும் போதும் வேறு இனம் தேவையில்லை என்ற கட்டத்திற்கு இந்த தேர்தல் நிரூபித்துள்ளது.
அதேவேளை இதுவரை நடந்த நாடாளுமன்ற அமைச்சர்களில் முஸ்லீம் அமைச்சர் இல்லாத அமைச்சர்கள் இதுதான். இது எமக்கு பாரிய வெற்றி. மஹிந்த ராஜபஷ என்ன கூறினார் ஹக்கீம், றிசாட் என ஒருவரையும் எடுக்க மாட்டேன் என அவர் வாக்குறுதியளித்தார் அதனை அவர் செய்துகாட்டியுள்ளார்.
எனவே நாங்கள் தவறுகளை எவ்வாறு திருத்தப்போகின்றோம். எதிர்காலத்தில் இவ்வாறு பிழையை விட்டுவிட்டு வந்து வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருமாறும் பாலம் கட்டித் தருமாறும் வீதியை போட்டுத் தருமாறும் கேட்க வேண்டுமென்றால் நாங்கள் அவர்களுக்கு வாக்களித்தால்தான் உரிமையோடு கேட்கலாம். எனவே எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிறந்த முடிவுளை எடுக்கவேண்டும்.
தேர்தல் காலங்களில் மேடைகளில் சிலரை தேசிய தலைவர் என விழிக்கின்றனர் ஆனால் எவருக்கும் அந்த தகுதியில்லை எனக்கு கூட தகுதியில்லை நான் கூட தேசிய தலைவர் பிரபாகரினால் வளர்கப்பட்டவன் அந்த தகுதி தலைவர் பிரபாகரனுக்கு மட்டும் தான் உள்ளது” என கூறினார்.