மஹிந்தவின் சொகுசு பங்களாவிலிருந்துகொண்டு மஹிந்தவை தோற்கடிக்க அழைப்பு விடும் அரசியல் நேர்மையற்ற சம்பந்தன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, November 13, 2019

மஹிந்தவின் சொகுசு பங்களாவிலிருந்துகொண்டு மஹிந்தவை தோற்கடிக்க அழைப்பு விடும் அரசியல் நேர்மையற்ற சம்பந்தன்!

தலைவன் என்பவன் அறிவு, துணிவு,நேர்மையானவாக இருக்க வேண்டும். சம்பந்தனிடம் அறிவிருக்கலாம், ஓரளவு துணிவிருக்கலாம். அரசியல் துணிவு அறவே கிடையாது. அரசியல் நேர்மையென்பது அவரிடம் துளியவும் கிடையாது. மஹிந்த ராஜபக்சவிற்குரிய எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில் வாழ்ந்து கொண்டு, மஹிந்தவை தோற்கடிக்க வேண்டுமென தமிழர்களிடம் அறைகூவல் விடுக்கிறார் என காட்டமாக தெரிவித்துள்ளார் ரெலோ அமைப்பின் செயலாளர் என்.சிறிகாந்தா.

நேற்று மாலுசந்தி மைக்கல் விளையாட்டரங்கில் எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரித்து நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

சம்பந்தனின் அரசியல் தோல்விகளை புட்டுப்புட்டு வைத்த சிறிகாந்தா, இனிமேல் அந்த மனிதனுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லையென்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2010இல் சம்பந்தன் சொன்னது போல தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். மஹிந்த வென்றார். 5 வருடம் எதுவும் செய்யவில்லை. வீதி போட்டு படம் காட்டினார். ஜால்ராக்களிற்கு கோடிகோடியாக கொள்ளையடிக்க வழிகாட்டினார்.

2015இல் சம்பந்தன் சொன்னதை போல மைத்திரிக்கு வாக்களித்தோம். என்ன நடந்தது? எல்லாவற்றையும் விடுங்கள், மைத்திரி வாக்களித்த ஆனந்தசுதாகரனின் விடுதலை.. அரசியல் கைதிகளின் விடுதலை நடந்ததா? எதையும் கண்டுகொள்ளாத ரணில், எதையும் கண்டுகொள்ளாத தமிழ் தேசிய கூட்டமைப்பு… சம்பந்தன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றது புளொட்… நாங்கள் சார்ந்த ரெலோ எல்லோரும்தான். யதார்த்தத்தை மறைக்க முடியாது. இவ்வளவு காலமும் இந்த மனிதன்- சம்பந்தனிற்கு கொடுத்தோம்.

52 நாள் அரசியல் குழப்பத்தில், அரசியலமைப்பிற்கு விரோதமாக மஹிந்த பிரதமராக்கப்பட்டார். மஹிந்த- சம்பந்தன் சந்தித்தார்கள். அவர் சில கோரிக்கைகளை கொடுத்தார். உடனடியாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை கூட்டினார். கில்லாடி. தனக்கு பிரச்சனையென்றால் ஒருங்கிணைப்புக்குழுவை கூட்டுவார். அங்கு பிரச்சனையென்றால் நாடாளுமன்றகுழுவை கூட்டுவார்.

மஹிந்த அரசியலமைப்பிற்கு விரோதமாக நியமிக்கப்பட்டுள்ளவர் என கூறிக்கொண்டு எப்படி அவரை சந்தித்தீர்கள் என நான் கேட்டேன். அன்று மட்டுமல்ல, அடுத்தநாளும் அவரது முகம் சுண்டிப்போயுள்ளது. தலைவன் என்பவன் அறிவு, துணிவுள்ளவனாக, எல்லாவற்றையும் விட நேர்மையானவாக இருக்க வேண்டும். சம்பந்தனிடம் அறிவிருக்கலாம், ஓரளவு துணிவிருக்கலாம். அரசியல் துணிவு அறவே கிடையாது. அரசியல் நேர்மையென்பது அவரிடம் துளியவும் கிடையாது. அப்படியிருந்திருந்தால் எதிர்கட்சி தலைவராக அவர் இருந்தபோது வழங்கப்பட்ட மாளிகையை, பதவி பறிபோனதும் மரியாதையாக அந்த மாளிகையை திருப்பிக் கொடுக்க வேண்டும். வெளியேற கொஞ்சம் காலம் கேட்டார், இழுத்தடித்தார், பிறகு மேல்மட்டத்தில் சொல்லப்பட்டது, அவர் வருத்தமாக இருக்கிறார், சுகபோமாக இருக்க வேண்டுமென்றார்கள். மஹிந்த ஏற்றுக்கொண்டார்.

இப்பொழுதும் அந்த வீட்டில் இருந்துகொண்டுதான் மஹிந்த ராஜபக்சவை தோற்கடியுங்கள் என தமிழ் மக்களிடம் அறைகூவல் விடுக்கிறார்.

உலகத்தின் எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் நாங்கள் கண்டிராத அரசியல் நகைச்சுவை இது. மானமுள்ள மனிதமாக, சூடு சொரணையற்றவராக இருக்கிறார். தமிழர்களின் தலைவராக அந்த மாளிகையை தூக்கியெறிந்திருக்க வேண்டும். இப்பிடியான மனிதர்கள் இன்று தமிழினத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.

ஒருகாலத்தில் இராமநாதன். தணிந்த மனிதன், நேர்மையான மனிதன். ஜி.ஜி.பொன்னம்பலம், அரசியல் தவறிருக்கலாம். ஆனால் தான் நம்பாததை சொல்ல மாட்டார். தந்தை செல்வா. அவரை யாரும் குறைகூற முடியாது. அண்ணன் அமிர்தலிங்கம். சறுக்கலிருந்தாலும் அரசியல் நேர்மையிருந்தது. தலைவர் பிரபாகரன். துணிந்த, வைரம் போன்ற தலைவன். புலிகளும், சிங்கங்களும் தலைமைதாங்கிய தமிழர்களிற்கு இன்று ஆடு கிடைத்துள்ளது என்றார்.