தமிழர் தாயக அழிப்பின் சாட்சியாக இருக்கின்றது இத்தாவில் 'கிபிர்க்குளம்' - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, November 9, 2019

தமிழர் தாயக அழிப்பின் சாட்சியாக இருக்கின்றது இத்தாவில் 'கிபிர்க்குளம்'

இத்தாவில் பிரதேசத்தில் இறுதி யுத்த காலத்தில் சிறிலங்கா விமானப் படையின் கிபிர் விமானக் குண்டுவீச்சில் ஏற்பட்ட பாரிய குழி 'கிபிர்க்குளம்' என அழைக்கப்படுகின்றது. 


யுத்தம் மௌனிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்தக் குழி தூர்ந்துபோகவில்லை. அதில் பெருமளவு நீர் தேங்கி நிற்கின்றது. பார்ப்பதற்கு இது குளம் போன்று காணப்படுவதால் பிரதேச மக்கள் 'கிபிர்க்குளம்' எனப் பெயரிட்டுள்ளனர். 

தமிழர் தாயக பூமியின் மீது சிறிலங்கா படையினர் வானில் இருந்தும் கடலில் இருந்தும் படை முகாம்களில் இருந்தும் ஏவிய குண்டுகள் வீழ்ந்த இடங்கள் இவ்வாறு குளங்கள் போல இன்றும் காட்சியளிக்கின்றன. 

போரின் வடுக்களாக உள்ள இந்தக் குன்றுகளும் குளங்களும் எதிர்காலத் தலைமுறைக்கு சிங்கள தேசத்தில் அநீதிகளை நிச்சயம் எடுத்துச் சொல்லும். இதற்காக இந்தக் குளங்களையும் குன்றுகளையும் எமது தலைமுறை பாதுகாக்கவேண்டும். 

சிங்கள தேசம், பயங்கரவாத அழிப்பு என்ற பெயரில் கொத்துக் குண்டுகளை வீசி தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக கொன்றொழித்தது போதாதென்று தமிழர் தாயக பூமியையும் பாழாக்கியது. 

போரின் வடுக்களை தமிழ் மக்கள் உடல்களில் சுமப்பதைப் போன்று தாயக மண்ணும் போரின் வடுக்களைச் சுமந்துகொண்டுதான் இருக்கின்றது. இதற்கு உதாரணம்தான் இத்தாவில் பிரதேசத்தில் உள்ள இந்த கிபிர்க்குளம்.  

இந்தக் கிபிர்க்குளத்தை தனது முகப்புத்தகத்தில் தரவேற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் அதில் இவ்வாறு வசனம் எழுதியுள்ளார், 

'வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையும் வீணே கடலைச் சென்றடைய விடமாட்டேன் என்றான் சிங்கள மன்னன் முதலாம் பராக்கிரமபாகு. 

வானிலிருந்து நீங்கள் போட்ட ஒவ்வொரு குண்டு வீழ்ந்த குழியிலும் நீரைச் சேமிக்காமல் விடமாட்டோம் என சபதம் எடுத்துள்ளோம் நாங்கள்'