பாபர் மசூதிக்குள் ராமர் தோன்றிய வரலாறு – அயோத்தியில் என்ன நடந்தது? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, November 10, 2019

பாபர் மசூதிக்குள் ராமர் தோன்றிய வரலாறு – அயோத்தியில் என்ன நடந்தது?

காந்தியின் மரணம் ராமரை மசூதிக்குள் கொண்டுவந்தது, அபிராம்தாஸின் மரணம் ராமர் என்னும் ஆன்மீக அடையாளத்தை அரசியல்மயப்படுத்தியது. அந்த வரலாறு இதோ...

“இங்கே விவசாயம் செழித்து இருக்கிறது. குறிப்பாக சுக்தா மற்றும் ஜான்வான் வகையறா அரிசிகளின் விளைச்சல் அதிகம். மேலும் பூக்களும் பழங்களும் மக்களிடையிலான கொண்டாட்டங்களும் அதிகம் நிறைந்த பகுதி இது. காட்டெருமைகளின் எண்ணிக்கை இங்கே அதிகம் காணப்படுகின்றன. ஔத் (அயோத்தியா) இந்தியாவின் மாபெரும் நகரங்களில் ஒன்று எனலாம். புனித இடங்களில் ஒன்றாக இந்த இடம் மதிப்பிடப்படுகிறது. ராமச்சந்திரரின் வசிப்பிடமாக இருந்திருக்கிறது."

பாபர் மசூதி உள்ளே

- இது 16ம் நூற்றாண்டில் அய்-ன் – அக்பரி என்கிற அக்பர் குறித்தான வரலாற்றுப் படைப்பில் அபுல் ஃபதல் குறிப்பிட்டிருப்பது. 16ம் நூற்றாண்டின் வாக்கில் அயோத்தியா பெரும் நகரமாக உருவெடுத்திருந்ததற்கான ஆதாரங்களையும் அதே நூற்றாண்டில் ராமர் அங்கே விவாதப்பொருளாக இருந்திருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களையும் இது முன்வைக்கிறது. அபுல் ஃபதல் தன் காலத்தின் நிகரற்ற ஆவணப்பதிவாளர். இதே பதிவில் செப்பு நாணயப் புழக்கம் இருந்தது குறித்தும் அவர் பதிவிடுகிறார். கஜினியின் சமகாலத் துருக்கியர்கள் படையெடுப்பு நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள்தான் இவை. பாபருக்கும் மிர்-பாக்கிக்கும் முன்பாக டெல்லியின் மீது படையெடுப்பு நிகழ்ந்தது என்பதற்கான ஆதாரம்தான் இந்தச் செப்பு நாணயப் புழக்கம். ஏற்கெனவே இருந்த மசூதி அல்லது மசூதி வடிவிலான ஒன்றை மிர்பாக்கி புனரமைப்பு செய்தார் என்பதற்கான கூடுதல் ஆதாரத்தை இந்த ஆவணம் பதிவு செய்கிறது.

ஆங்கிலேயப் பயணியான வில்லியம் ஃபிஞ்ச் என்பவரின் 1608 முதல் 1611 வரையிலான பயண ஆவணத்திலும் ராமர் மற்றும் அவரது கோட்டை குறித்து குறிப்பிடப்படுகிறது. “ராமர் என்கிற மனிதர் இந்தக் கோட்டையில் வாழ்ந்திருக்கிறார். பிற்காலத்தில் அவரைப் புனிதராக மக்களில் ஒரு சாரார் வணங்கத் தொடங்கினார்கள்…” என்று அவரது ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அபுல் ஃபதலின் ஆவணங்களை உறுதிபடுத்தும் வகையில் இடம்பெறும் ஃபிஞ்சின் ஆவணங்கள் ராமரின் கோயில் என்று குறிப்பிடாமல் ராமச்சந்திரர் வாழ்ந்த கோட்டை அல்லது ராம்கோட் எனக் குறிப்பிடுகின்றன.

பாபர் மசூதி உள்ளே
பாபர் மசூதி உள்ளே
Sunil Bajpai
அயோத்தியில் ராமர் கோயில்!
காந்தியின் கொலைக்காகக் கைது செய்யப்பட்டு பிறகு வெளியே வந்த திக்விஜய்நாத் மதத்தை வலுப்படுத்துவதற்காகக் கையிலெடுத்த முக்கிய முடிவுகளில் ஒன்று அயோத்தியில் ராமர் கோயிலை நிறுவுவது.
நீங்கள் அயோத்திக்குச் சென்று இருக்கிறீர்களா? ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அயோத்தியில் இன்று பாபர் மசூதி இடமல்லாது அதன் சுற்றுவட்டாரத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் ராமருக்கான கோயில் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். பதினைந்து கோயில்களும் அவை இருக்கும் இடத்தில்தான் ராமர் பிறந்ததாகச் சொல்லுபவை. இவை தவிர தசரதன், கோசலை, பரதன் ஆகியோருக்குத் தனித்தனியே கோயில்களும் இங்கே இருக்கின்றன. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தில் அவருக்கும் அயோத்தி ராமர் கோயில் சர்ச்சைக்குமான தொடர்பையும் இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது. 1948ல் காந்தியைச் சுட்டுக் கொன்றது கோட்சேதான் என்றாலும் அதற்காகத் திட்டம்தீட்டிய இந்து மகா சபாவின் குழுவில் இடம்பெற்றிருந்த முக்கிய நபர் மஹந்த் திக்விஜய் நாத். ‘காந்தியைச் சுட்டுக் கொல்லுங்கள்’ என்று அவர் மேடையில் பேசிய மூன்றாவது நாளில்தான் கோட்சே அவரைத் துப்பாக்கியால் சுட்டார். காந்தியின் கொலைக்காகக் கைது செய்யப்பட்டு பிறகு வெளியே வந்த திக்விஜய்நாத் மதத்தை வலுப்படுத்துவதற்காகக் கையிலெடுத்த முக்கிய முடிவுகளில் ஒன்று அயோத்தியில் ராமர் கோயிலை நிறுவுவது.

பாபர் நுழையாத பாபர் மசூதி: அயோத்தியில் என்ன நடந்தது? பாகம் 1
Also Read
பாபர் நுழையாத பாபர் மசூதி: அயோத்தியில் என்ன நடந்தது? பாகம் 1
2019-ல் இன்று உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் அயோத்தி நிலத்தின் மீதான ஆதிப் பிரச்னை காந்தி கொலையின் பெயரால் கைது செய்யப்பட்ட திக் விஜய்நாத் மற்றும் இன்னபிறரிடமிருந்துதான் தொடங்கியது. இது பாபர் மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டதன் 70ம் ஆண்டும்கூட. 1992 டிசம்பர் 6 அன்று நிர்மூலமாக்கப்பட்ட பாபர் மசூதி ஏதோ ஒரே இரவில் நிகழ்த்தப்பட்ட காரியமல்ல. அதற்கான விதை காந்தியின் படுகொலையிலிருந்தே தொடங்கியது எனலாம். 23 டிசம்பர் 1949 அன்று நள்ளிரவு... வைத்தவர் பெயர் அபிராம்தாஸ்.

அயோத்தி பாபர் மசூதி சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனுமன்கரில் இந்துமதச் சாதுக்கள் (நிர்மோகிக்கள்) வசிப்பதற்காக இருந்த கூடாரத்தில் அபிராம்தாஸ் வசித்துவந்தார்.

கடவுள், ஆன்மீகம் என்று தங்களுக்கு என்று எல்லை வரையறுத்திருந்த நிர்மோகிக்களிடம் அரசியலும் புகத் தொடங்கியதும் காந்தியின் மறைவுக்குப் பிறகான அதே காலகட்டத்தில்தான். பாபர் மசூதியில் ராமர் சிலை என்கிற ஒரே கொள்கை திக்விஜய்நாத்தையும் அபிராம்தாஸையும் இணைத்தது. முரணும் வேடிக்கையுமாக இன்று அதே கூட்டணி பிளவுபட்டு ராமர் கோயில் நிலத்தின்மீதான தங்களுக்கான முழு உரிமையை நிர்மோகிக்களும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தனித்தனியே கோரிக்கொண்டிருக்கிறார்கள்.

23 டிசம்பர் 1949 நள்ளிரவில் மசூதிக்குள் சிலை வைத்தது தொடர்பாக அபிராம்தாஸ் மீது அனுமன்கர் காவல்நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது. அபிராம்தாஸ் மதப்பற்றாளர்கள் வட்டத்தில் தனி அடையாளம் பெறத் தொடங்கினார். அவர் மீதான வழக்கும் காற்றில் கரைந்தது. அபிராம்தாஸ் குறித்த ஆவணங்களைத் தனது ‘அயோத்தியின் இருண்ட இரவு’ புத்தகத்தில் குறிப்பிடும் எழுத்தாளர்கள் கிருஷ்ணஜா மற்றும் தீரேந்திர ஜா, ’ராம ஜென்ம பூமியைக் காக்கப் பிறந்தவர்’ என்று அபிராம்தாஸ் அறியப்பட்டதைக் குறிப்பிடுகின்றனர். ‘ராம ஜென்ம பூமி’ என்கிற சொல்லாக்கமும் அப்படித்தான் உருவாகியிருக்கிறது.

சிலை வைக்கப்பட்டதன் 32 வருடங்களுக்குப் பிறகு 3 டிசம்பர் 1981-ல் அபிராம்தாஸ் மரணிக்கிறார். அவரது பூத உடலைச் சமாதி செய்ய எடுத்துச் சென்ற சாதுக்கள் பாபர் மசூதி வழியாகவே சரயூ நதிக்கரையை அடைந்தார்கள். ராம்கோட்டில் இருக்கும் மசூதியின் நுழைவு வாயில் அருகே அவரது உடல் சிறிது நேரம் வைக்கப்படுகிறது. அவரது இறப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்ட விஷ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். மற்றும் நிர்மோகிகள் அனைவரும் பாபர் மசூதி முன்பு உரக்கச் சொல்லியபடிச் சென்றது ஒரு விஷயம்தான். “ராமர் கோயிலைக் கட்டுவோம்!” என்று உரக்க ஒலித்தபடியே அபிராம்தாஸை சரயூ நதியோரம் சமாதி செய்தார்கள்.

காந்தியின் மரணம் ராமரை மசூதிக்குள் கொண்டுவந்தது, அபிராம்தாஸின் மரணம் ராமர் என்னும் ஆன்மீக அடையாளத்தை அரசியல்மயப்படுத்தியது.