ஐ.தே.க.வின் தலைமைத்துவம் சஜித்திடம் வழங்கப்படாவிட்டால் படுதோல்வியடைய நேரிடும் – அஷோக - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, November 21, 2019

ஐ.தே.க.வின் தலைமைத்துவம் சஜித்திடம் வழங்கப்படாவிட்டால் படுதோல்வியடைய நேரிடும் – அஷோக

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் பொறுப்பை சஜித் பிரேமதாசவிடம் கையளிக்காவிட்டால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் படுமோசமாக தோல்வியடைய நேரிடும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க எச்சரித்துள்ளார்.

கொழும்பு வொக்ஷோல் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் காரியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “நாட்டிற்காக பல்வேறு சேவைகளை முன்னெடுத்த சஜித் பிரேமதாச, ஜனாதிபதி தேர்தலில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைய நேர்ந்தமை தொடர்பாக கட்சியின் ஆதரவாளர்களும், மக்களும் மிகுந்த கவலையடைந்திருக்கின்றார்கள்.

இந்நிலையில் விரைவாக பொதுத்தேர்தல் ஒன்றுக்குச் செல்வதற்கு நாம் தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையானோர் விரும்பினால் மாத்திரமே உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த முடியும். அத்தகைய பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம்.

எனவே அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் மார்ச் மாதம் முதலாவது வாரத்தில் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாத நடுப்பகுதியில் அல்லது மே மாத முற்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்.

எனவே, எமக்கு இன்னமும் சுமார் 6 மாதங்கள் அவகாசமுள்ளது. அந்தவகையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் பதவிகளை சஜித் பிரேமதாசவிற்குப் பெற்றுக்கொடுத்து, அவர்களின் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதே எமது எதிர்பார்ப்பாகும்.

எமது கட்சி பல காலமாக தோல்வியடைந்து வருகின்றது. 4 வருடகாலத்திற்குப் பின்னர் எதிரணியினரால் எம்மைத் தோற்கடிக்க முடிந்திருக்கின்றது என்றால், மீண்டும் எதிர்வரும் 4 வருடங்களின் பின்னர் அவர்களை நாம் தோற்கடிக்க வேண்டும். அதனை நிச்சயம் செய்வோம்.

எனவே சஜித் பிரேமதசவிற்காக வாக்களித்தவர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களைப் பொறுமையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். உங்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமான வேலைத் திட்டத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம். அதனை இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே செயற்படுத்தி, அதில் நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றியை அடைந்து கொள்ளக்கூடிய வகையில் கட்சியை வழிநடத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்