வித்தியா படுகொலை வழக்கில் யாழ் மேல் நீதிமன்றம் விடுத்த உத்தரவு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, November 30, 2019

வித்தியா படுகொலை வழக்கில் யாழ் மேல் நீதிமன்றம் விடுத்த உத்தரவு



புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவிக்க உதவிய குற்றச்சாட்டு வழக்கில் 2 வது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஶ்ரீகஜன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் இல்லாமலேயே வழக்கை விளக்கத்துக்கு எடுக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் வழக்கின் முதலாவது எதிரியான வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்கவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை நேற்று மன்றில் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.

எதிரி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து சுற்றவாளி என்று மன்றுரைத்தார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஶ்ரீகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.



சுவிஸ்குமார் என்பவரை சட்டமுறையற்ற வகையில் பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்க உதவியதன் மூலம் தண்டனைச் சட்டக் கோவை 209 ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றம் ஒன்றைப் புரிந்தமை மற்றும் அதற்கு ஒத்துழைத்ததன் மூலம் 109 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 209 ஆம் பிரிவின் கீழான குற்றம் ஒன்றைப் புரிந்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் இருவருக்கும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப் பத்திரிகையில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட 30 பேர் வரை சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நேற்று (29) விசாரணைக்கு வந்தது.



முதலாவது சந்தேகநபர் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க முன்னிலையானார். இரண்டாவது சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளதால் அவர் மன்றில் முன்னிலையாகவில்லை.

வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார்.

முதலாவது எதிரிக்கு குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்பிக்கப்பட்டதுடன் அதன் பிரதி அவருக்கு வழங்கப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்த அவர், சுற்றவாளி என்று மன்றுரைத்தார்.

“இந்த வழக்கின் ஆவணங்கள் உரியவாறு வழக்குத் தொடுனரிடமிருந்து கிடைக்கவில்லை. அத்துடன், இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சில்வா நாட்டில் இருந்து வெளியேறியுள்ளார். அதுதொடர்பில் சட்ட மா அதிபருடன் கலந்துரையாடப்பட வேண்டும்” என்று எதிரி லலித் ஜெயசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.

எதிரி தரப்பு விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், வழக்கின் ஆவணங்களை எதிரி தரப்புக்கு வழங்குவதற்காக வரும் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்தார்.

(பின்னணி)

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், 2015 ஆம் ஆண்டு மே 13 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். மறுநாள் அவரது சடலம் பற்றைக் காணிக்குள் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் வழக்கின் சந்தேக நபர்களைப் பொலிஸாரும் பொதுமக்களும் பிடித்தனர். சுவிஸ்குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரையும் ஊர் மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.



அவரை யாழ்ப்பாணம் அழைத்து வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஶ்ரீகஜன், அன்றைய தினம் இரவு பொலிஸ் காவலிலிருந்து அவரை விடுவித்தார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஶ்ரீகஜன் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அதுதொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகி உள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றால் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று சட்ட மா அதிபரின் நடவடிக்கைகக்காக விடப்பட்டது. இதேவேளை, மாணவி படுகொலை வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் (Trial at bar) முன்னிலையில் இடம்பெற்றது.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இடம்பெற்று சுவிஸ்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதனை அடுத்தே சுவிஸ்குமாரை தப்பிக்க வைத்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஶ்ரீகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றஞ்சாட்டப்பட்டவரை தடுப்பில் இருந்து விடுவிக்க உதவி குற்றம் நிரூபிக்கப்பட்டால் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும் தலா 5 ஆண்டுகளுக்கு விஞ்சாத சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.