மாவீரர், போராளிகள் குடும்பங்களிற்கு உதவக்கூடாது : ‘இலங்கையன்’ அனுப்பிய எச்சரிக்கை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, November 22, 2019

மாவீரர், போராளிகள் குடும்பங்களிற்கு உதவக்கூடாது : ‘இலங்கையன்’ அனுப்பிய எச்சரிக்கை


மாவீரர் மற்றும் போராளிகளின் குடும்பங்களுக்கு மன்னார் நகர சபையின் தலைவரினால் சலுகைகள் மற்றும் அன்பளிப்புக்கள் வழங்கப்படுவதாகவும், இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டு ‘இலங்கையன்’ எனும் பெயரில் எச்சரிக்கை கடிதம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை தனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

அந்த கடிதத்தில்,

மன்னார் நகர சபையில் தற்போது மாவீரர் மற்றும் போராளிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அதிகலவான வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வருவதாக அறிகின்றோம்.

சிறுவர் பூங்கா உற்பட பல பொது இடங்களில் புலிகளின் தேசிய கலரான சிவப்பு, மஞ்சள் பூசப்பட்டுள்ளது.

மன்னார் மக்கள் வங்கிக்கு பின் புறமாக தற்போது கட்டப்பட்டு வரும் கடைகளில் பல கடைகள் மாவீரர் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான செயல்கள் இனியும் தொடரக் கூடாது. மாவீரர் மற்றும் போராளி குடும்பங்களுக்கு சலுகைகள் மற்றும் அன்பளிப்புக்கள் முன்னுரிமைகள் அளிக்கப்படக்கூடாது. நிறுத்தப்பட வேண்டும். உங்களுக்குறிய அரச கடமையை மட்டும் சரியாக செய்யவும். உங்கள் அனைவரையும் பற்றி தகவல்கள் சேகரிக்கப்படுகின்றது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவிக்கையில்,

மக்களுக்கான பணிகளை நாங்கள் நேர்மையாகவும், கண்ணியமாகவும், கட்டுக்கோப்புடனும் மேற்கொண்டு வருகின்றோம். நாங்கள் எந்த வித அச்சுறுத்தல்களுக்கும் அடி பணியப் போவதில்லை.

எத்தடைகள் வந்தாலும் எமது இலக்கும், எமது பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.