உலகத் தமிழர்களுக்கான ஒரே தேசியத் தலைவர் பிரபாகரன்தான் – கருணா - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, November 19, 2019

உலகத் தமிழர்களுக்கான ஒரே தேசியத் தலைவர் பிரபாகரன்தான் – கருணா

உலகத்திலேயே தமிழனுக்கு ஒரே ஒரு தேசியத் தலைவன் என்றால் அது தலைவர் பிரபாகரன் மாத்திரம்தான் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விநாயகமுர்த்தி முரளிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “இறுதி யுத்தத்தில் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள்.

நீங்கள் மட்டும் சென்று உறுதிபடுத்தி கூறினால் மட்டுமே நான் நம்புவேன் என அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னிடம் கூறினார்.

நான் அவ்வாறு நடந்திருக்கக்கூடது என நினைத்து களத்திற்குச் சென்றேன். அங்கு சென்று பார்த்தேன். அவர்தான். ஆனால் அதனைக்கூட எங்களுடையவர்கள் உரிமை கோருகின்றார்கள் இல்லையே.

அவர் வருவார், அவர் வருவார் என அவரை வெளிநாட்டில் விற்றுக்கொண்டே இருக்கின்றார்கள். அவர் செய்தது ஒரு வீரத்தியாகம்.

இன்று நாங்கள் சுபாஸ் சந்திரபோஸினை எப்படி பாராட்டுகின்றோம். ஆனால் இன்னும் அவரை மாவீரர் பட்டியலில் சேர்க்கவில்லை.சேர்த்தால் அது ஒரு வரலாறு.

நேற்று முளைத்த ஒரு அரசியல் தலைவர் ஒருவரை, மேடையில் வைத்து ஒருவர் பேசுகின்றார். எங்களுடைய அண்ணன் தேசியத் தலைவர் இங்கு இருக்கின்றார் தமிழ்த் தலைவன் என உரை போகின்றது.

ஆனால் அவர் அரசியலுக்கு வந்து மூன்று வருடங்களும் இல்லை. உலகத்திலேயே தமிழனுக்கு ஒரே ஒரு தேசியத் தலைவன். அதுதான் தலைவர் பிரபாகரன். வாரவன் போரவன் எல்லாம் தலைவனாகிட முடியுமா? தேசியத் தலைவருடன் நான் 30 வருடங்கள் இருந்துள்ளேன்.

எனவே அன்றைய போராட்டங்களை இன்றைய காலகட்டத்தில் அரசியல் வடிவத்தில் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்.

மேலும் மாற்றம் ஒன்றை உருவாக்க வேண்டும். எனவே மக்களும் நிதானமாகவும் கவனமாகவும் சிந்தித்து செயலாற்ற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.