இளஞ்செழியனின் தீர்ப்பில் கை வைக்கும் கோத்தா: கொலைக்குற்றவாளி இராணுவத்தினருக்கு விடுதலை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, November 24, 2019

இளஞ்செழியனின் தீர்ப்பில் கை வைக்கும் கோத்தா: கொலைக்குற்றவாளி இராணுவத்தினருக்கு விடுதலை

சுனில் ரத்நாயக்க, புலனாய்வுத்துறையின் மேஜர் டிக்ஷன் மற்றும் கோப்ரல் பிரியந்த ராஜகருணா ஆகியோருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.



யாழ்ப்பாண இளைஞர் ஒருவரை கைது செய்து திருநெல்வேலி முகாமில் வைத்து கொலை செய்ததாக சுனில் ரத்நாயக்க, புலனாய்வுத்துறையின் மேஜர் டிக்ஷன் மற்றும் கோப்ரல் பிரியந்த ராஜகருணா ஆகியோருக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் இராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். இந்நிலையில் சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறித்த மூன்று இராணுவ அதிகாரிகளில் இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

நீதிபதி இளஞ்செழியனால் ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைதாகி சிறை வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவம், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பை வழங்குமாறு தாய்நாட்டிற்கான இராணுவத்தினர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கருணா அம்மான், குமரன் பத்மநாதன் உள்ளிட்டவர்கள் இன்று வெளியே சுதந்திரமாக இருக்கின்ற நிலையில், ஏன் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வெளியே அனுமதிக்க முடியாது என்று அந்த அமைப்பின் இணைப்பாளரான மேஜர் அஜித் பிரசன்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் தாய் நாட்டிற்கான இராணுவத்தினர் என்கிற அமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.