இரகசிய முகாம்களோ இரகசிய கைதிகளோ இல்லை ஆனால் அரசியல் கைதிகளை விடுவிப்போம் – கருணா - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, November 18, 2019

இரகசிய முகாம்களோ இரகசிய கைதிகளோ இல்லை ஆனால் அரசியல் கைதிகளை விடுவிப்போம் – கருணா

அமைச்சராக இருந்த போது அனைத்து சிறைச்சாலைகளையும் சென்று பார்வையிட்டதாகவும் அதன்பிரகாரம் இரகசிய முகாம் அல்லது இரகசிய கைதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மான் தெரிவித்தார்.


வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனும் இறந்துவிட்டார் என கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும். அது ஒரு சிறு பிரச்சனை. இந்த 134 பேரும் சாதாராண போராளிகள். இரு ஒரு பாரிய பிரச்சனையாக உலகளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதனை நாம் கோட்டாவிடம் தெரிவித்துள்ளோம். நாம் நிச்சயமாக விடுவிப்போம் என எமக்கு தெரிவித்துள்ளனர். எனவே அதில் உள்ள சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோர் இருக்கின்றார்களா என்பதை அரச தலைவர் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.அதனையும் கோட்டாவிடம் நாம் எதிர்பாக்கிறோம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் குறிப்பிட்ட வருடத்திற்கு பின்னர் அவர்களிற்கு மரண அத்தாட்சி கொடுத்திருக்க வேண்டும்.

நான் அமைச்சராக இருந்த போது அனைத்து சிறைச் சாலைகளையும் அவதானித்துள்ளேன். அதன்படி இரகசிய முகாம் அல்லது இரகசிய கைதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

அந்த விடயத்தில் தெளிவான முடிவை எமது மக்களுக்கு நாம் வழங்கவேண்டும். இதையும் பெரிய பிரச்சனையாக்கிக் கொண்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது ஒரு வேதனையான விடயமே.

எனது சகோதரனும் காணாமல் ஆக்கபட்டுள்ளார். அவர் மரணமடைந்து விட்டார் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவரது உடலை நாம் எடுக்கவில்லை. அதற்காக அவர் இருக்கிறார் என்பதை நாம் நம்பவில்லை. போரில் அனைத்து பக்கமும் பிழை நடந்துள்ளது. கொலை செய்யாதவர் எவரும் இல்லை.

இது போர் நடந்த பூமி. எனவே நாம் வருந்துகிறோம் என மன்னிப்பு கோரவேண்டும். இதற்கு அரச தலைவரே பொறுப்பு கூறவேண்டும். அதை விட்டு போரில் ஒருவரும் கொல்லப்படவில்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

இறுதி போரில் வெள்ளை கொடியுடன் சரணடைந்தார்களா இல்லையா என்பது கேள்விக்குறிதான். அப்பிடி நடந்து அரசு அதை மீறி செயற்பட்டிருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டும்.

எனினும் அந்த விடயம் எந்த அடிப்படையில் கூறப்படுகிறது என்பதை ஏற்கமுடியாது. எனினும் போர் இறுதிக்கட்டத்தை அடையும் போது இதனை நிறுத்துவதற்கான சந்தர்பம் பல இருந்தது. அது பயன்படுத்தப்படவில்லை. இறுதிகட்டத்தை நெருங்கும் போது சரணடைதல் என்பது காலம் கடந்த நடவடிக்கையாகதான் நான் பார்க்கிறேன்.

போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொலைசெய்யப்பட்டார்கள். அவர்கள் போரில் நெருங்கியே கொலை செய்யப்பட்டார்கள். திட்டமிட்டு கொலை செய்யப்படவில்லை. இதனை தமிழ் மக்கள் ஏற்றுகொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தாமல் அவர்களை விடுவித்து விட்டு எமது போராளிகள் மடிந்திருப்பார்களாக இருந்தால்.உலகம் வரவேற்றிருக்கும்” என கூறினார்